வடகாடு பகுதியில் பலாப்பழம் விற்பனை மந்தம்

வடகாடு பகுதியில் பலாப்பழம் விற்பனை மந்தமாக நடைபெற்று வருகிறது.

Update: 2021-04-07 18:17 GMT
வடகாடு:
பலாப்பழம் உற்பத்தி
வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் முக்கனிகளில் ஒன்றான பலாப்பழ உற்பத்தி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இப்பகுதிகளில் விளையும் பலாப்பழங்கள் மிகவும் சுவை மிகுந்ததாக உள்ளதால் வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநில வியாபாரிகளால் விரும்பி வாங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு கொரோனா பொதுமுடக்கத்தால் பலாப்பழங்களை வாங்குவோர் இன்றி மரங்களிலேயே பழுத்து வீணாகியது. இதனால் இந்த ஆண்டும் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தங்களிடம் இருந்த பலா மரங்களை குத்தகை மற்றும் ஒத்திக்கு மொத்தமாக கொடுத்து பணம் வாங்கி தங்களது சிறுசிறு தேவைகளை நிவர்த்தி செய்து வருகின்றனர். பலாமரங்களை குத்தகைக்கு விட்டதால், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற பழமொழிக்கு ஏற்ப தங்களது பலாமரங்களில் இருந்து, தாங்களே பலாப்பழங்களை ருசிக்க முடியாத நிலையில் உள்ளனர்.
குறைந்த அளவிலான
பெரும்பாலான பலாமரங்களை அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளதால் இப்பகுதிகளில் உள்ள கமிஷன் கடைகளுக்கு குறைந்த அளவிலான பலாப்பழங்கள் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. குறைந்த அளவிலான பலாப்பழங்கள் விற்பனைக்கு வருவதால் பலாப்பழ விற்பனை சற்று மந்தமாகவே நடைபெற்று வருகிறது. மேலும் வியாபாரிகள் பலாப்பழங்களை மொத்தமாக பறித்து வெளியூர்களுக்கு கொண்டு சென்றுவிடுகின்றனர். 
இந்தநிலையில் கொரோனா தொற்று நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், இப்பகுதி விவசாயிகள் சற்று அச்சத்துடனேயே இருந்து வருகின்றனர்.மேலும் தமிழ் வருடப்பிறப்பு மாதமான சித்திரை மாதம் பிறக்க இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால். சித்திரை மாதம் முதல் பலாப்பழ விற்பனை சூடு பிடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்