தி.மு.க. முகவர்கள் மீது அ.தி.மு.க.வினர் தாக்குதல்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தி.மு.க. முகவர்கள் மீது அ.தி.மு.க.வினர் தாக்குதல் நடத்தினர்.

Update: 2021-04-07 20:40 GMT
திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் பழனி சாலையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. 

இந்த வாக்குச்சாவடி மையத்தில் தி.மு.க. முகவர்களாக நகர துைண செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள் சரவணன், காளிமுத்து, ரஞ்சித்குமார் உள்பட 7 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர். 

நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் வாக்குச்சாவடி மையம் அருகே தி.மு.க. முகவர்கள் நின்று கொண்டிருந்தனர். 

அப்போது அங்கு அ.தி.மு.க. நகர பொருளாளர் முருகன் மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்த சிலர் அங்கு வந்தனர். 

அவர்களுக்கும், தி.மு.க. முகவர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் கிருஷ்ணமூர்த்தி உள்பட 7 பேரையும் அ.தி.மு.க.வினர் தாக்கியதாக கூறப்படுகிறது. 

காயமடைந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களை தி.மு.க. வேட்பாளர் அர.சக்கரபாணி எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார். 

இதற்கிடையே தாக்குதல் நடத்திய அ.தி.மு.க.வினரை கைது செய்யக்கோரி ஒட்டன்சத்திரம் பஸ்நிலையம் அருகே தி.மு.க.வினர் நேற்று முன்தினம் இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவலறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைச்சாமி தலைமையிலான போலீசார் அங்கு வந்து தி.மு.க.வினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அதில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்