ஆத்தூர் நகர பஞ்சாயத்து அலுவலகத்தை பெண்கள், வியாபாரிகள் முற்றுகை

ஆத்தூர் நகர பஞ்சாயத்து அலுவலகத்தை பெண்கள், வியாபாரிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்

Update: 2021-04-08 13:25 GMT
ஆறுமுகநேரி:
ஆத்தூரில் பஜார் மற்றும் தெருக்களில் கால்நடைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தக் கோரி நேற்று நகர பஞ்சாயத்து அலுவலகத்தை பெண்கள், வியாபாரிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
கால்நடைகளால் அவதி
ஆத்தூர் பஜார் மற்றும் முக்கிய வீதிகளில், கூட்டம் கூட்டமாக உலா வரும் கால்நடைகளால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
குறிப்பாக மெயின் பஜார் மற்றும் யாதவர் தெருவில் எப்போதும் கால்நடைகள் சுற்றி திரிகின்றன. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படும் நிலை இருக்கிறது.
நகர பஞ்சாயத்து அலுவலகம் முற்றுகை
இது தொடர்பாக ஆத்தூர் நகர பஞ்சாயத்தில் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.  ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து யாதவர் தெரு பெண்கள் மற்றும் பஜார் வியாபாரிகள் இனைந்து ஆத்தூர் நகர பஞ்சாயத்து அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இது தகவல் அறிந்து ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது, நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி மணிமொழி போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக தெருக்கள் மற்றும் பஜாரில் சுற்றித்திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை ஏற்றுக் கொண்டு  பெண்களும் வியாபாரிகளும் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்