விஷம் குடித்து சிகிச்சையில் இருந்த தங்கையின் காதலனை கத்தியால் குத்திய வாலிபர்

ேதனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், விஷம் குடித்து சிகிச்சையில் இருந்த தங்கையின் காதலனை கத்தியால் குத்திய அண்ணன் உள்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-04-08 13:53 GMT

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள நாச்சியார்புரம் கிராமத்தை  சேர்ந்தவர் வேல்முருகன் (வயது25). இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவர் ரஞ்சனி(20) என்ற பெண்ணை காதலித்தார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து கடந்த மாதம் 22-ந் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர்.
இதுகுறித்து ரஞ்சனியின் பெற்றோர் ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் காதல் ேஜாடி கரூரில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் கரூர் சென்று காதல் ேஜாடியை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் ரஞ்சனியின் விருப்பப்படி, அவர்  பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார். 
கத்திக்குத்து
இதனிடையே காதலியை தன்னிடம் இருந்து பிரித்து விட்டதாக வேல்முருகன் மிகவும் மனம் வருந்தினார். இதைத்தொடர்ந்து அவர் நேற்று முன்தினம்  விஷம்  குடித்து விட்டு நாச்சியார்புரம் அருகே உள்ள கண்மாய் கரையோரம் மயங்கி கிடந்தார். இதை அக்கம்பக்கத்தினர் பார்த்து அவரை மீட்டு தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக  சேர்த்தனர். அங்கு அவர் அவசர சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 
இந்தநிலையில் வேல்முருகனை, ரஞ்சனியின் அண்ணன் விஜய்(27) பார்க்க சென்றார். அப்போது அவர் திடீரென தான் கொண்டு வந்திருந்த கத்தியை எடுத்து வேல்முருகனின் தோள்பட்டையில் குத்தினார். இதையடுத்து வேல்முருகன் வலியால் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு மருத்துவமனை பணியாளர்களும், செவிலியர்களும் அங்கு ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் விஜய் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். 
இந்தநிலையில் படுகாயமடைந்த வேல்முருகனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த துணிகர சம்பவம் தொடர்பாக விஜய் மற்றும் இதற்கு உடந்தையாக இருந்ததாக உறவினர்கள் ஆதி நாராயணா, செந்தில், அஜித், ராஜேஷ், பாக்கியராஜ், சரவணன் உள்பட 9 பேர் மீது க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்