வாணியம்பாடியில் 10 மணி நேரத்திற்கு மேல் ஒரே இடத்தில் நின்ற கன்டெய்னர் லாரி வாக்குப்பெட்டிகள் மாற்றம் என பொதுமக்கள் சந்தேகம்

வாணியம்பாடி நகராட்சி பள்ளி முன்பு 10 மணி நேரத்துக்கு மேல் ஒரே இடத்தில் நின்ற லாரியால் வாக்குப்பெட்டிகள் மாற்றம் என பொதுமக்கள் சந்தேகம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-04-08 15:04 GMT
வாணியம்பாடி

கன்டெய்னர் லாரி

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 6-ந் தேதி நடந்து முடிந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மத்திய அரசு கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

மேலும் தமிழகம் முழுவதும் நடைபெற்ற வாக்குப்பதிவு எந்திரங்களை 74 மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பில் தேர்தல் ஆணையம் கண்காணித்து வருகிறது.

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் உள்ள நகராட்சி ஆண்கள் உயர் நிலைப்பள்ளி முன்பு வடமாநில பதிவு எண் கொண்ட கன்டெய்னர் லாரி ஒன்று 10 மணி நேரத்துக்கு மேல் நின்று கொண்டு இருந்தது. 

இதனை கண்ட அப்பகுதி மக்கள் தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில் பள்ளி நுழைவாயில் முன்பு நீண்ட நேரமாக கன்டெய்னர் லாரி நின்று கொண்டு இருந்ததை கண்டு வாக்குப்பெட்டிகள் மாற்றப்பட உள்ளதா என சந்தேகம் அடைந்தனர். 

இலவச காலணிகள்

இதுகுறித்து அப்பகுதி மக்கள் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில்  போலீசார் விரைந்து வந்து லாரி டிைரவரிடம் விசாரணை நடத்தினர்.  

விசாரணையில் 2021-2022-ம் கல்வியாண்டில் வாணியம்பாடி கல்வி மாவட்டத்தில் உள்ள 104 அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக தமிழக அரசு சார்பில் வழங்கும் இலவச காலணிகள் (20,800 ஜோடி ஷூக்கள்) கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தார். 

இதனை தொடர்ந்து கல்வித்்துறை அதிகாரிகளை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தி தகவலை போலீசார் உறுதி செய்தனர். 

இதனால் மக்கள் மத்தியில் நிலவி வந்த வாக்குப்பெட்டிகள் மாற்றம் என்ற பரபரப்பும், சந்தேகமும் முடிவுக்கு வந்தது.

மேலும் செய்திகள்