இருதரப்பு மீனவர்களிடையே மோதல்;17 பேர் மீது வழக்கு

நாகையில் இருதரப்பு மீனவர்களிடையே நடந்த மோதல் தொடர்பாக 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ஆரிய நாட்டு தெருவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்

Update: 2021-04-08 17:11 GMT
நாகப்பட்டினம்:
நாகையில் இருதரப்பு மீனவர்களிடையே நடந்த மோதல் தொடர்பாக 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ஆரிய நாட்டு தெருவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முன்விரோதம்
நாகையில் கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி பாதித்த பிறகு மீனவர்கள் பல்வேறு பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர். இதில் ஆரிய நாட்டு தெருவை சேர்ந்த மீனவர்கள் நகரில் பல்வேறு பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர். இவ்வாறு மகாலட்சுமி நகரில் குடியமர்த்தப்பட்டவர்களுக்கும், ஆரியநாட்டு தெருவில் இருப்பவர்களுக்கும் மீனவ பஞ்சாயத்தார் பொறுப்பாளர்கள் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.
ஆரியநாட்டு தெருவில் மீனவ பஞ்சாயத்தார் பொறுப்பில் இருக்கும் தர்மபாலன் தலைமையிலானவர்களை மாற்ற வேண்டும் என பல மாதங்களாக மகாலட்சுமி நகரையை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். 
இந்த நிலையில் நேற்று முன்தினம் மீனவ பஞ்சாயத்தார் பொறுப்பாளர்களை மாற்ற கோரிக்கை வைத்த மகாலட்சுமி நகரைச் சேர்ந்த 5 மீனவர்களை  நாகை காடம்பாடி பகுதியில், ஆரியநாட்டுத்தெரு மீனவர்கள் அரிவாள் மற்றும் கத்தியால் வெட்டினர். இதில் காயமடைந்த 5 பேரும் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
17 பேர் மீது வழக்கு
இது குறித்து நாகை வெளிப்பாளையம் போலீசில் நாகை காடம்பாடியைச் சேர்ந்த மாரியப்பன் புகார் செய்தார். இதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆரியநாட்டு தெருவைச் சேர்ந்த தர்மபாலன், ஆனந்தன், கதிர், நவீன், ஜெனிபர், உதயா, அரவிந்த், குலோத்துங்கன், அருண்பாண்டி, பிரகதீஷ், அருள் ஆகிய 11 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 
அதே போல் நாகை காடம்பாடியை சேர்ந்த கணேசமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் ஆரியநாட்டு தெருவைச் சேர்ந்த ரவிச்சந்திரன், குமரன், சரவணன், கலையரசன், சக்திவேல், குமணன் ஆகிய 6 பேர் மீது வெளிப்பாளையம் போலீசார் கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
போலீஸ் குவிப்பு
இதனிடையே அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம், ஆரிய நாட்டு தெருவில், 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்