மின் கம்பி உரசியதில் லாரியில் தீ விபத்து

பல்லடம் அருகே, மின் கம்பி உரசியதில் லாரியில் தீ விபத்து ஏற்பட்டு அதில் இருந்த பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசமானது.

Update: 2021-04-08 17:47 GMT
பல்லடம்
பல்லடம் அருகே, மின் கம்பி உரசியதில் லாரியில் தீ விபத்து ஏற்பட்டு அதில் இருந்த பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசமானது.
இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது
மின் கம்பி உரசியது
பல்லடம் அருகே ஆராகுளத்தில் தனியார் டெக்ஸ்டைல்ஸ் உள்ளது. இங்கிருந்து கரடிவாவியில் உள்ள தனியார் மில்லுக்கு 54 பஞ்சு மூட்டைகள் ஏற்றிக்கொண்டு, ஒரு லாரி சென்றது. அந்த லாரியை கரடிவாவி பகுதியை சேர்ந்த ஜெயராஜ் (வயது 50) என்பவர் ஓட்டிச்சென்றார். லாரி கரடிவாவி அருகே சென்ற போது, எதிர்பாராதவிதமாக ரோட்டின் ஓரமாக இருந்த மின்கம்பியில் பஞ்சு மூட்டைகள் உரசியது. இதில் திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. உடனே அந்த வழியாக சென்றவர்கள் லாரியில் தீ பிடித்தது குறித்து சத்தம் போட்டனர். 
பஞ்சு மூட்டைகள் நாசம்
உடனே லாரியை ஓரமாக நிறுத்திய டிரைவர் அந்த வழியாக வந்த தண்ணீர் லாரி மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றார். இந்த தீ விபத்து குறித்து பல்லடம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. 
அதன்பேரில் சம்பவ இடம் வந்த தீயணைப்புத் துறையினர் மேலும் தீ பரவாமல் தடுத்து தீயை அணைத்தனர். இதற்குள் லாரியில் இருந்த 20 மூட்டைகள் பஞ்சு தீயில் எரிந்து சாம்பலானது. இதன் மதிப்பு  ரூ.60 ஆயிரம் ஆகும். இந்த தீ விபத்து குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்