உரங்கள் விலை கிடு கிடு உயர்வு

உரங்கள் விலை கிடு கிடுவென உயர்ந்து வருவதால் விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.

Update: 2021-04-08 18:15 GMT
ரிஷிவந்தியம், 

ரிஷிவந்தியத்தை  சுற்றி அரியலூர், வாணாபுரம், வடபொன்பரப்பி, கடுவனூர், அத்தியூர், மரூர், கடம்பூர் உள்பட  60-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும். தற்போது விவசாயிகள் ரிஷிவந்தியம் பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் கரும்பும், 300 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் நெல்லும் பயரிட்டு பராமரித்து வருகி்ன்றனர். 
இது தவிர மணிலா, மரவள்ளிக் கிழங்கு உள்ளிட்ட பயிரும் சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர். பயிர்கள் நன்கு வளர்ந்து வருவதால் விவசாயிகள் இந்தாண்டு நல்ல வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து இருந்தனர். 
இந்த நிலையில் தற்போது வரலாறு காணாத வகையில்  உரங்கள் விலை உயர்ந்துள்ளதால் பயிர்களை முறையாக பராமரிக்க முடியாமல் கண்ணீர் வடித்து வருகின்றனர். 

டி.ஏ.பி. உரம்

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், வடகிழக்கு பருவமழை பரவலாக நல்ல முறையில் பெய்ததால் ஏரி, குளங்களில் தண்ணீர் அதிகமாக உள்ளது. மேலும் நிலத்தடி நீர் மட்டமும் அதிகரித்துள்ளதால் கிணறுகளிலும் அதிக அளவு தண்ணீர் உள்ளது. இதனால் இந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என்ற நம்பிக்கையில் பெரும் செலவு செய்து கரும்பு, நெல், மணிலா உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து பராமரித்து வருகிறோம்.
 ஆனால் தற்போது உரங்களின் விலை நாங்கள் எதிர்பார்க்காத வகையில் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி 50 கிலோ கொண்ட டி.ஏ.பி. உரம் கடந்த பிப்ரவரி மாதம் ரூ.1200-க்கு விற்பனையானது. தற்போது 700 ரூபாய் உயர்ந்து ரூபாய். 1900-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இதேபோல் 1.160-க்கு விற்ற ஒருமூட்டை 10 -26 -26 காம்ப்ளக்ஸ் உரம் தற்போது ரூ.615 உயர்ந்து ரூ.1775-க்கு விற்பனையாகி வருகிறது. 20- 20 -013 காம்ப்ளக்ஸ் உரம் ரூ. 950-ல் இருந்து ரூ.400 உயர்ந்து  ரூ.1,350 -க்கு விற்பனையாகி வருகிறது.

நடவடிக்கை

 உரத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருவதால் உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்து வருகிறது. ஆனால் விளைபொருட்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் பயிர்கள் அமோக விளைச்சலை கொடுத்தாலும்  எங்களுக்கு பெரும் நஷ்டம் தான் ஏற்படும். இந்த நஷ்டத்தை நாங்கள் எப்படி சமாளிக்க போகிறோம் என்று தெரியவில்லை. இப்படியே போனால் வரும் காலங்களில் நாங்கள் விவசாயமே செய்யமுடியாத நிலை உருவாகும். இதனை தவிர்க்க உடனே உரங்களின் விலையை அதிரடியாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர். 

மேலும் செய்திகள்