பழைய ஜெயங்கொண்டத்தில் குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

பழைய ஜெயங்கொண்டத்தில் குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Update: 2021-04-15 17:48 GMT
லாலாபேட்டை
குடிநீர் பற்றாக்குறை
கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே உள்ள பழைய ஜெயங்கொண்டம் எம்.ஜி.ஆர்.நகர் 12-வது வார்டில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில நாட்களுக்கு கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 
இதனால் இப்பகுதி பொதுமக்கள் பல்வேறு பகுதிகளில் அலைந்தும் குடிநீர் கிடைப்பதில்லை. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. 
முற்றுகை போராட்டம்
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை காலிக்குடங்களுடன் பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கிளை பொறுப்பாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். 
இதுகுறித்து தகவல் அறிந்த லாலாபேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. 
பேச்சுவார்த்தை
இதையடுத்து, பேரூராட்சி செயல் அலுவலர் ராஜகோபால் மற்றும் கிருஷ்ணராயபுரம் மண்டல தாசில்தார் மதியழகன் ஆகியோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது செயல் அலுவலர் கூறுகையில், மேற்கண்ட பகுதி பொதுமக்களுக்கு இன்னும் 10 நாட்களில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் அரைமணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது. 

மேலும் செய்திகள்