மீன் பிடிக்கச்சென்ற பள்ளிக்கூட மாணவன் ஆற்றில் மூழ்கி சாவு

மீன் பிடிக்கச்சென்ற பள்ளிக்கூட மாணவன் ஆற்றில் மூழ்கி இறந்தான்.

Update: 2021-04-15 22:56 GMT
மொடக்குறிச்சி
மீன் பிடிக்கச்சென்ற பள்ளிக்கூட மாணவன் ஆற்றில் மூழ்கி இறந்தான்.
மாணவன்
மொடக்குறிச்சி அண்ணா வீதியை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன் சதீஷ் (வயது 15). மொடக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மதியம் தன்னுடைய நண்பர்கள் ஜீவா, சதீஷ்குமார், அஜய்குமார் ஆகியோருடன் சேர்ந்து பஞ்சலிங்கபுரம் அருகேயுள்ள சிலுவன்கொம்பு என்ற இடத்தில் செல்லும் காவிரி ஆற்றில் மீன் பிடிக்கச்சென்றார். மீன்பிடித்தபோது ஆழமான பகுதிக்கு சதீஷ் சென்றதாக கூறப்படுகிறது. நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கிவிட்டார். இதைப்பார்த்த நண்பர்கள் சத்தம் போட்டு பொதுமக்களை உதவிக்கு அழைத்தார்கள். ஆனால் காப்பாற்ற முடியவில்லை. 
உடல் மீட்பு
இதுபற்றி  மொடக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு நிலைய அதிகாரி கோமதி தலைமையில் தீயணைப்பு வீரர்களும் மற்றும் போலீசாரும் காவிரி ஆற்றுக்கு விரைந்து வந்தார்கள். அதன்பின்னர் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் இறங்கி தேடினார்கள். சிறிது நேரத்தில் சதீசின் உடல் கிடைத்தது. அதை மீட்டு மொடக்குறிச்சி போலீசாரிடம் ஒப்படைத்தார்கள். பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சதீசின் உடலை பார்த்து அவருடைய உறவினர்கள் கதறி துடித்தது பார்ப்பவர்களை கண்கலங்க செய்தது. 

மேலும் செய்திகள்