குடியாத்தம் அருகே சுடுகாடு ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
குடியாத்தம் அருகே சுடுகாடு ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.;
குடியாத்தம்
சுடுகாடு ஆக்கிரமிப்பு
குடியாத்தம் தாலுகா கல்லப்பாடி ஊராட்சி வெங்கட்டூர் கிராமத்தில் 800-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்களுக்கு தனியாக சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் சுடுகா மிகவும் குறுகி விட்டதாக கூறப்படுகிறது.
சுடுகாடு ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி அப்பகுதி பொதுமக்கள் கிராமசபை கூட்டங்களிலும், தாலுகா அலுவலகம், மாவட்ட நிர்வாகத்திற்கும் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
சாலை மறியல்
இந்தநிலையில் இப்பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் நேற்று இறந்து விட்டார். அவரது உடலை சுடுகாட்டில் எரிக்க இடம் இல்லாததால் அப்பகுதியிலுள்ள ஓடை பகுதியில் உறவினர்கள் எரித்துள்ளனர். சுடுகாடு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் இந்த அவலநிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற பலமுறை கோரிக்கை விடுத்தும் அகற்றாத அதிகாரிகளை கண்டித்தும், உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும், குடியாத்தம்- சித்தூர் சாலையில் கல்லப்பாடி பஸ் நிறுத்தம் அருகே நேற்று மாலையில் வெங்கட்டூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பரதராமி போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சென்று பொதுமக்களிடம் சுடுகாடு ஆக்கிரமிப்பு குறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனால் சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற சாலை மறியல் கைவிடப்பட்டது.