ஸ்ரீமுஷ்ணம் அருகே சோகம் ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

ஸ்ரீமுஷ்ணம் அருகே ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்தனர்.;

Update:2021-04-16 22:31 IST
ஸ்ரீமுஷ்ணம், 

ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள ராமாபுரம் வாலீஸ்பேட்டை கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பிரகாசராயர். இவரது மகன் சஞ்சய் விஜய் (வயது 9). அதே ஊரில் உள்ள கோவில் தெருவை சேர்ந்த லெனின் மகன் கவின் (4½).
நேற்று முன்தினம் சிறுவர்கள் இருவரும் வாலீஸ்பேட்டை கோக்கட்டை ஏரிக்கு சென்றனர். பின்னர் அவர்கள் வீடு திரும்பவில்லை. அவர்களது பெற்றோர் பல இடங்களிலும் தேடி பார்த்தும், கிடைக்கவில்லை.

இந்நிலையில் மாலை 4 மணி அளவில் சிறுவன் சஞ்சய் விஜய் கோக்கட்டை ஏரியில் பிணமாக மிதந்தான். இதைபார்த்த அப்பகுதி மக்கள் மற்றொரு சிறுவனை ஏரிக்குள் தேடினர். அப்போது, கவினும் பிணமாக மீட்கப்பட்டான். 2 பேரின் உடல்களை பார்த்து அவர்களது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

சோகம்

தகவலறிந்த ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தனர். ஏரிக்கு குளிக்க சென்ற போது சிறுவர்கள் இருவரும் நீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்