வன உயிரினங்களை வேட்டையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை

திருவிழா என்ற பெயரில் வன உயிரினங்களை வேட்டையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனவர் எச்சரித்தார்.

Update: 2021-04-18 19:21 GMT
வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பகுதிகளில் பல்வேறு ஊர்களில் சித்திரை மாதத்தில் முயல்வேட்டை திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அப்போது பலர் முயல்களை வேட்டையாடுவதாக வனத்துறைக்கு வந்த புகாரையடுத்து, வேப்பந்தட்டை வனவர் பாண்டியன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;-

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வனக்காப்பு காடுகள் மற்றும் வயல்வெளி பகுதிகளில் வன உயிரினங்களான மான், முயல், கவுதாரி, மயில், காட்டுப்பன்றி, பூனை போன்ற உயிரினங்கள் வேட்டையாடப்படுவது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். மேலும் திருவிழா என்ற பெயரில் முயல் மற்றும் வன உயிரினங்கள் வேட்டையாடப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது. இதனை மீறி வன உயிரினங்கள் வேட்டையாடப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972-ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சமூக வலைத்தளங்களில் வன உயிரினங்கள் வேட்டையாடப்படுவது, சித்திரவதை செய்யப்படுவது போன்ற காட்சிகள் வெளியிடுபவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்