கொரோனா தொற்று காரணமாக தடுப்புகள் வைத்து மாமல்லபுரம் கடற்கரை மூடல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

கொரோனா தொற்று காரணமாக தடுப்புகள் வைத்து மூடப்பட்ட மாமல்லபுரம் கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Update: 2021-04-19 01:53 GMT
மாமல்லபுரம், 

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவுகிறது. இந்த குறிப்பிட்ட மாவட்டங்களில் வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்களுக்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்த குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள கடற்கரையில் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் கூட்டமாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு பொழுதை கழிப்பதற்காக நேற்று ஏராளமான பயணிகள் கடற்கரை சாலை வழியாக மணல்பாதையில் கடற்கரைக்கு சென்றனர்.

தடுத்து நிறுத்தினர்

கடற்கரை கோவில் அருகில் திருவள்ளுவர் சிலை நுழைவு வாயில் பகுதியில் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மேற்பார்வையில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சுற்றுலா பயணிகளை தடுத்து நிறுத்தி கொரோனா தொற்று அதிகம் பரவி வருகிறது. அதனால் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுரை கூறி திருப்பி அனுப்பினர்.

வெறிச்சோடியது

அதேபோல் மத்திய தொல்லியல் துறை தடையால் நாடு முழுவதும் புராதன சின்னங்கள் மூடப்பட்டதால் மாமல்லபுரம் கடற்கரை கோவில், வெண்ணை உருண்டைக்கல், அர்ச்சுணன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்கள் மூடப்பட்ட நிலையில் அந்த பகுதிகள் உள்ள சாலைகள், பயணிகள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

அதேபோல் கடற்கரைக்கு தடை விதிக்கப்பட்டதால் வியாபாரம் இல்லாத காரணத்தால் கடற்கரை சாலையில் உள்ள பெரும்பாலான கடைகள் நேற்று மூடப்பட்டிருந்தன.

மேலும் செய்திகள்