உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்காததால் நேற்று முன்தினம் விபத்து ஏற்படுத்திய அரசு பஸ்சை ஜப்தி செய்திட மாவட்ட நீதிபதி, நீதிமன்ற ஊழியர்களுக்கு உத்திரவிட்டார்.;
காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். அவரது நண்பர் ஹேமசந்திரன். இருவரும் தாம்பரத்தில் இருந்து திண்டிவனம் நோக்கி 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி இரவு தனது இருசக்கர வாகனத்தில் செங்கல்பட்டை அடுத்த மாமண்டூர் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த அரசு பஸ் அவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் இறந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென இறந்த சந்தோஷ்குமாரின் தாயார் சகுந்தலா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கருணாநிதி ரூ.14 லட்சத்து 47 ஆயிரம் நஷ்ட ஈடாக வழங்கிட வேண்டும் என்று கடந்த 2017-ம் ஆண்டு தீர்பளித்தார்.
தற்போது அதற்கு வட்டியுடன் சேர்ந்து ரூ.20 லட்சத்து 75 ஆயிரமாக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்காததால் நேற்று முன்தினம் விபத்து ஏற்படுத்திய அரசு பஸ்சை ஜப்தி செய்திட மாவட்ட நீதிபதி, நீதிமன்ற ஊழியர்களுக்கு உத்திரவிட்டார். அதன்பேரில் அரசு பஸ்சை ஜப்தி செய்த நீதிமன்ற ஊழியர்கள் தாலுகா அலுவலக பகுதியிலுள்ள மாவட்ட கோர்ட்டில் ஒப்படைத்தனர்.