காஞ்சீபுரத்தில் நவீன போக்குவரத்து சிக்னல்; போலீஸ் சூப்பிரண்டு திறந்து வைத்தார்
பட்டு நகரமாகவும், சுற்றுலா நகரமாகவும் விளங்கும் காஞ்சீபுரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பஸ் நிலையம் அருகே நான்கு முனை பகுதியான இரட்டை மண்பத்தில் ஏற்கனவே சாதாரண போக்குவரத்து சிக்னல் செயல்பட்டு வந்தது.;
தற்போது அதே இடத்தில் பழைய போக்குவரத்து சிக்னலை அகற்றி விட்டு நவீன வசதிகளுடன் போக்குவரத்து சிக்னல் அமைக்க தனியார் மருத்துவ ஆய்வகத்தினர் முன்வருவதாக கூறி போலீசார் அனுமதித்தனர். அதன்பேரில் நிழற்குடையுடன் அதி நவீன வசதிகளுடன் கூடிய போக்குவரத்து சிக்னல் அமைக்கும் பணி முடிவடைந்த நிலையில் 4 திசைகளிலும் அதிநவீன சுழல் கேமரா, மின் விளக்கு, ஒலி பெருக்கி, அதிநவீன டிஜிட்டல் சிக்னலுடன் அமைக்கப்பட்டது. காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா விழாவில் கலந்துகொண்டு புதிய போக்குவரத்து சிக்னலை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமேகலை, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நெடுஞ்செழியன், சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார், சப்- இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.