வெளியூர் டாக்டர் மூலம் பிரேத பரிசோதனை செய்யக்கோரி உறவினர்கள் போராட்டம்

செங்கல்சூளை தொழிலாளி சாவில் மர்மம் உள்ளது எனவே வெளியூர் டாக்டர் மூலம் பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்க வேண்டும் என உறவினர்கள் போராட்டம் ஈடுபட்டுள்ளனர்

Update: 2021-04-19 17:12 GMT
சீர்காழி:
செங்கல்சூளை தொழிலாளி சாவில் மர்மம் உள்ளது எனவே வெளியூர் டாக்டர் மூலம் பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்க வேண்டும் என உறவினர்கள்  போராட்டம் ஈடுபட்டுள்ளனர்.
தூக்கில் செங்கல்சூளை தொழிலாளி பிணம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நெப்பத்தூர் கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் நிம்மேலி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சீனிவாசன் (வயது42) என்பவர் கடந்த 17-ந் தேதி காலை மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இதனால் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அவரது சாவில் மர்மம் உள்ளதாக கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருவெண்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சீனிவாசனின் உடலை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக சீர்காழியை சேர்ந்த செங்கல்சூளை உரிமையாளர் சுரேஷ்சந்த் (62), இவருடைய மகன் சித்தார்த் (32), இரவு நேர காவலாளி மோகன்ராஜ் (42) ஆகிய 3 பேர்களையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உள்ளிருப்பு போராட்டம்
இந்தநிலையில் நேற்று 3-வது நாளாக சீர்காழி அரசு மருத்துவமனையில் சீனிவாசன் உடலை பிரேத பரிசோதனை செய்ய பணிகள் தொடங்கியது. அதனை தடுத்து நிறுத்திய சீனிவாசனின் உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் சாவில் மர்மம் உள்ளதால், உள்ளூர் டாக்டர்களை கொண்டு பிரேத பரிசோதனை செய்யக்கூடாது, தங்கள் சார்பில் உள்ள வக்கீல் முன்னிலையில் வெளியூர் டாக்டர்களை கொண்டு பிரேத பாிசோதனை செய்ய வேண்டும். இதனை வீடியோ பதிவு செய்யவும் அனுமதிக்க வேண்டும் எனவும் கோரி் 3-வது நாளாக நேற்று சீர்காழி அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீஸ் பாதுகாப்பு
இதனால் நேற்று சீனிவாசனின் உடல் பிே்ரத பரிசோதனை செய்வது தடைபட்டது. மேலும் தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை தொடர்வதாதகவும், மாவட்ட கலெக்டர் தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.
இதன் காரணமாக சீர்காழி அரசு மருத்துவமனை வளாகத்தில் பதட்டமான சூழல் நிலவி உள்ளது. இதனையடுத்து சீர்காழி போலீஸ் துணை சூப்பிரண்டு யுவப்பிரியா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்