தப்பாட்டம் அடித்து கலெக்டரிடம் மனு கொடுத்த கிராமிய கலைஞர்கள்

கொரோனா தடையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்க கோரி கிராமிய கலைஞர்கள் தப்பாட்டம் அடித்து சிவகங்கை கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Update: 2021-04-19 18:12 GMT
சிவகங்கை,

கொரோனா தடையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி வழங்க கோரி கிராமிய கலைஞர்கள் தப்பாட்டம் அடித்து சிவகங்கை கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

கலெக்டரிடம் மனு

சிவகங்கை மாவட்டம் கழுகோர்கடை கிராமிய தப்பாட்டக்குழு  சங்கத்தின் சார்பில் தப்பாட்ட கலைஞர்கள் 20 பேர் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி தப்பாட்டம் இசைத்து, ஆட்டம் ஆடி சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டியை சந்தித்து தங்கள் கோரிக்கை மனுவை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறி இருப்பதாவது:-
பங்குனி மாதம் முதல் கிராம கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறும். அந்த திருவிழாக்களின் போது மேடை, நாடகங்கள் நடத்தப்படுவதும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதும் தென் மாவட்டங்களில் வழக்கம்.

அனுமதிக்க வேண்டும்

இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக கோவில் திருவிழாக்களுக்கு அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் சீசன்களில் மட்டுமே வருமானத்தை ஈட்டி ஆண்டு முழுவதும் தங்களது வாழ்வை நடத்திவரும் மேடை நாடக கலைஞர்கள், இசை கலைஞர்கள், தடையின் காரணமாக வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே தங்களுக்கான கலை நிகழ்ச்சிகளை நடத்திட அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்