பில்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.31.78 லட்சம் மோசடி தலைவர், செயலாளர் கைது

பில்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.31 லட்சத்து 78 ஆயிரம் மோசடி செய்யப்பட்ட வழக்கில் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரை வணிக குற்ற புலனாய்வு போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-04-19 18:26 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பில்லூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு பட்டா, சிட்டா மூலம் பயிர்க்கடன் மற்றும் நகைக்கடன் வட்டியில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு இந்த கடன் சங்கத்தின் வரவு-செலவு கணக்குகளை கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தணிக்கை செய்தனர். அப்போது 26-5-2017 முதல் 25-10-2019 வரையிலான காலகட்டத்தில் பயிர்க்கடன், நகைக்கடன் வழங்கியது உள்ளிட்டவற்றில் ரூ.31 லட்சத்து 78 ஆயிரம் மோசடி நடந்து இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து திருச்செங்கோடு சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் வெங்கடாசலம் நாமக்கல் மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு போலீசாரிடம் புகார் செய்தார்.

தலைவர், செயலாளர் கைது

அந்த புகாரின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், இன்ஸ்பெக்டர் சின்னதங்கம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்த மோசடியில் வங்கியின் தலைவர் வேலுச்சாமி (வயது 63), செயலாளர் வெங்கடேச பெருமாள் (57) ஆகிய இருவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இந்தநிலையில் நேற்று தலைவர் வேலுச்சாமி, செயலாளர் வெங்கடேச பெருமாள் ஆகிய இருவரையும் வணிக குற்றபுலனாய்வு போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்