தனியார் பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தீக்குளித்து தற்கொலை

கரூரில் குறைவான சம்பளத்தால் தான் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்து தனியார் பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-04-19 18:37 GMT
கரூர்
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 
கல்லூரி விரிவுரையாளர்
கரூர் வாங்கப்பாளையத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் தமிழ்ச்செல்வன் (வயது 29). மெக்கானிக்கல் என்ஜினீயர். இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள பிஜிபி பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 2 ஆண்டுகளாக விரிவுரையாளராக பணியாற்றி வந்துள்ளார். 
இந்தநிலையில் தமிழ்ச்செல்வனுக்கு அவரது தாய் ஜானகி திருமண ஏற்பாடுகள் செய்து வந்துள்ளார். ஆனால் தமிழ்ச்செல்வன் தனக்கு குறைவான சம்பளம் கிடைப்பதால் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்த ஏதுவாக இருக்காது எனக் கூறி திருமணத்திற்கு மறுத்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களாகவே அவர் மனவேதனையில் இருந்து வந்தார்.
தற்கொலை
இந்தநிலையில் கடந்த 17-ந்தேதி தமிழ்ச்செல்வன் தனது வீட்டில் மண்எண்ணெயை உடலில் ஊற்றி  தீ வைத்தார். இதனால் அவரது உடல் முழுவதும் தீக்காயம் அடைந்து அலறி துடித்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் மற்றும் அக்கம், பக்கத்தின் ஓடி வந்தனர். பின்னர் தீக்காயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 
இது தொடர்பாக தமிழ்ச்செல்வனின் தாய் ஜானகி கரூர் வெங்கமேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கல்லூரி விரிவுரையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்