விவசாயியை அரிவாளால் வெட்டிய ரவுடி அடித்துக்கொலை

செந்துறை அருகே விவசாயியை அரிவாளால் வெட்டிய ரவுடி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-04-19 20:29 GMT
கொளஞ்சி
செந்துறை:

முந்திரி தோப்பில் தூங்கினார்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள வல்லம் கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி (வயது 44). ரவுடியான இவர் மீது பல்வேறு மாவட்டங்களில் போலீஸ் நிலையங்களில் கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் உள்ளன. போலீசாருக்கு பயந்து, அவர் இரவு நேரத்தில் முந்திரி காடுகளில் தூங்குவது வழக்கம். அதேபோல் நேற்று முன்தினம் இரவு இவர், புதுப்பாளையத்தில் இடையக்குறிச்சி செல்லும் வழியில் உள்ள முந்திரி தோப்பில் இருந்த கட்டிலில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது அந்த தோப்பை குத்தகைக்கு எடுத்துள்ள விவசாயியான இடையக்குறிச்சியை சேர்ந்த தர்மராஜ்(36) காவலுக்காக அங்கு வந்தார். தோப்பில் தனது கட்டிலில் மர்ம நபர் தூங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், கொளஞ்சியை எழுந்து செல்லுமாறு கூறினார். ஆனால் குடிபோதையில் இருந்த கொளஞ்சி எழுந்து செல்ல மறுத்து தகராறு செய்துள்ளார்.
அடித்துக்கொலை
இதைத்தொடர்ந்து தர்மராஜ் தனது உறவினர்களை அழைத்தார். அதன்பேரில் அங்கு இடையக்குறிச்சியை சேர்ந்த லோகேஸ்வரன் (26), பிரபாகரன்(30), சக்திவேல்(22) ஆகிய 3 பேர் வந்தனர். இதைக்கண்ட கொளஞ்சி அங்கிருந்து தப்பிச்சென்று முந்திரி மரத்தின் பின்னால் மறைந்து கொண்டார். அவரை, 4 பேரும் தேடிச்சென்று பிடித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த கொளஞ்சி, தான் வைத்திருந்த அரிவாளால் தர்மராஜை வெட்டி உள்ளார். இதனைக் கண்ட உறவினர்கள் கொளஞ்சியை சுற்றி வளைத்து தாக்கினர். இதில் கொளஞ்சி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த தர்மராஜ் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
3 பேர் கைது
இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மதன், தளவாய் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து கொளஞ்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கொலை நடந்த முந்திரி தோப்பிற்கு நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக தர்மராஜ், லோகேஸ்வரன், பிரபாகரன், சக்திவேல் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில் லோகேஸ்வரன், பிரபாகரன், சக்திவேல் ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களை செந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முந்திரி தோப்பில் ரவுடி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்