மது பாட்டில்கள் விற்பனையில் மோதல் சுத்தியலால் அடித்து வாலிபர் படுகொலை நண்பர்கள் கைது

மதுபாட்டில்கள் விற்பனையில் நடந்த மோதலில் வாலிபர் சுத்தியலால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது நண்பர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-04-20 02:11 GMT
சென்னை, 

சென்னை எம்.ஜி.ஆர்.நகர், வள்ளல் பாரி தெருவைச் சேர்ந்தவர் காசிவிஸ்வநாதன் (வயது 30). பெயிண்டராக வேலை செய்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இவரை விட்டு, இவரது மனைவி பிரிந்து வாழ்கிறார்.

அதே பகுதியைச்சேர்ந்த இருவர் திருட்டுத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்து வந்தனர். இவர்களிடம் அப்பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவர் மது வாங்கி குடித்துவிட்டு பணம் கொடுக்கவில்லை. பணத்தை கேட்டபோது ஏற்பட்ட மோதலில் சுந்தர்ராஜன் தாக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக மதுபாட்டில் விற்ற இருவர் மீதும் போலீசார் வழக்கு போட்டுள்ளனர். இந்த வழக்கை வாபஸ்பெறும்படி சுந்தர்ராஜனை, காசி விஸ்வநாதன் கேட்டுள்ளார். அதற்கு சுந்தர்ராஜன் மறுத்து விட்டார். இதையொட்டி காசிவிஸ்வநாதன், சுந்தர்ராஜனை தகாத வார்த்தையால் திட்டியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த சுந்தர்ராஜன், காசிவிஸ்வநாதனை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினார். காசிவிஸ்வநாதனை அங்குள்ள அண்ணா நெடுஞ்சாலை பகுதிக்கு தனியாக அழைத்துச்சென்று நேற்று முன்தினம் இரவு மது வாங்கி கொடுத்துள்ளார். போதை மயக்கத்தில் காசிவிஸ்வநாதன் அருகில் நின்ற ஆட்டோ ஒன்றில் படுத்து தூங்கிவிட்டார்.

அந்த நேரத்தில் சுந்தர்ராஜன், தனது நண்பர் பரமகுருவுடன் சேர்ந்து, காசிவிஸ்வநாதனை சுத்தியலால் தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த காசிவிஸ்வநாதன், அதே இடத்தில் பரிதாபமாக இறந்து போனார்.

நேற்று காலை ஆட்டோவில் கொலை செய்யப்பட்டு கிடந்த காசிவிஸ்வநாதனை பார்த்த பொதுமக்கள், போலீசுக்கு தகவல் கொடுத்தனர். கே.கே.நகர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

காசிவிஸ்வநாதன் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மதுபாட்டில் விற்பனையில் பணத்துக்காக ஏற்பட்ட மோதல், கடைசியில் கொலையில் முடிந்துவிட்டது. ஆனால் இவர்கள் அனைவரும் நண்பர்கள்.

காசிவிஸ்வநாதனை தீர்த்துக்கட்டி விட்டு, எதுவும் தெரியாதவர்கள் போல சுந்தர்ராஜனும், பரமகுருவும் நேற்று அதே பகுதியில் சுற்றித்திரிந்தனர். ஆனால் போலீஸ் விசாரணையில் அவர்கள்தான் கொலையாளிகள் என்று தெரிய வரவே, அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்