ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 9 பேர் மீது வழக்கு

ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் பஞ்சாயத்து தலைவரின் கணவர் உள்பட 9 பேர் மீது வழக்கு

Update: 2021-04-20 16:19 GMT
விருதுநகர்,ஏப்.
விருதுநகர் அருகே உள்ள செங்குன்றாபுரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 35). ஆட்டோ டிரைவர். இவரது ஆட்டோ அருகில் மது போதையில் ஒருவர் தடுமாறி கீழே விழுந்தார். இதனால் முத்துக்குமார் அவரிடம் இருந்து செல்போனை எடுத்து அவரது மனைவியை தொடர்புகொண்டு செல்போன் தன்னிடம் உள்ளதாக தெரிவித்துள்ளார். அதற்கு அவரது மனைவி மறுநாள் காலை வந்து செல்போனை வாங்கிக் கொள்வதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் செங்குன்றாபுரம் பஞ்சாயத்து தலைவரின் கணவர் சந்திரசேகரன் அங்கு வந்து மதுபோதையில் கீழே விழுந்தவரிடம் விசாரித்து விட்டு அவரது செல்போன் தொடர்பாக போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக ஆட்டோ டிரைவர் முத்துக்குமாருக்கும், சந்திரசேகரனுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது குறித்து ஆமத்தூர் போலீசில் புகார் செய்வதற்காக முத்துக்குமாரும், அவரது தம்பி சின்னகருப்பன் (28) என்பவரும் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது சந்திரசேகரன், கருப்பசாமி, தினேஷ் பாண்டி, தங்கப்பாண்டி வேலுச்சாமி, சுப்பையன், மகாகவி காளிதாஸ், முருகன், கணேசன் ஆகிய 9 பேரும் சேர்ந்து முத்துக்குமாரையும் அவரது தம்பி சின்னக்கருப்பனையும் வழிமறித்து தாக்கி படு காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.
இது பற்றி முத்துக்குமார் கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் சந்திரசேகரன் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 இந்த நிலையில் சந்திரசேகரன் (42) ஆமத்தூர் போலீசில் கொடுத்த புகாரில், செல்போன் தொடர்பாக விசாரித்த போது முத்துக்குமார், அவரது தம்பி சின்னகருப்பன் மற்றும் தங்கராஜ் ஆகிய 3 பேரும் அவதூறாக பேசியதுடன் தன்னை தாக்கியதாகவும் கூறியுள்ளார். இது தொடர்பாக போலீசார் முத்துக்குமார் உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்