தடுப்பூசி போட்டுக்கொண்ட 2 செவிலியர்களுக்கு கொரோனா: விழுப்புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூடல்

சுகாதார நிலையம் மூடல்

Update: 2021-04-20 17:30 GMT
விழுப்புரம், 
விழுப்புரம் மகாராஜபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வரும் 2 செவிலியர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெற்றதில் அவர்கள் இருவரும் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனே அவர்கள் இருவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மகாராஜபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தற்காலிகமாக 5 நாட்கள் மூடுவது என முடிவு செய்யப்பட்டு நேற்று முதல் ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது.  மேலும் நோய் தடுப்பு நடவடிக்கையாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அதன் வளாகம் முழுவதிலும் நகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்து நன்கு சுத்தம் செய்தனர். அதே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட செவிலியர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 2 செவிலியர்களும் ஏற்கனவே இருமுறை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்