கொரோனா பரவலை கட்டுப்படுத்த 11 சிறப்பு பறக்கும் படை குழுக்கள்

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 11 சிறப்பு பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு, அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்று கண்காணிக்கின்றனர்.

Update: 2021-04-20 20:47 GMT
பரளி கிராமத்தில் உணவகத்தில் பறக்கும் படையினர் சோதனை செய்தபோது எடுத்த படம்.
பெரம்பலூர்:

சிறப்பு பறக்கும் படை
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்திட மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா தொற்று பரவலை தடுக்க பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோதும், கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.
மேலும் மாவட்டத்தில் தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை தீவிரமாக கண்காணிப்பதற்கும், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிப்பதை உறுதி செய்யவும், பெரம்பலூர் பகுதி-1, பகுதி-2, வெங்கலம், வாலிகண்டபுரம், பசும்பலூர், கொளக்காநத்தம், கீழப்புலியூர், செட்டிக்குளம், வரகூர், வடக்கலூர், கூத்தூர் ஆகிய 11 குறுவட்டத்திற்கும் தலா ஒரு தாசில்தார் தலைமையில் ஒரு வருவாய் ஆய்வாளர் கொண்ட 11 சிறப்பு பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
சோதனை
எனவே பொதுமக்கள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்திட முககவசம் அணிவதை தவறாமல் பின்பற்ற வேண்டும். பொதுவெளியிலும், பணிபுரியும் இடங்களிலும் சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். சோப்பு, திரவத்தினை பயன்படுத்தி கைகளை அடிக்கடி நன்கு சுத்தம் செய்திட வேண்டும். அவசிய தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்த்து கொரோனா தொற்று பரவாமல் தடுத்திட மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் சிறப்பு பறக்கும் படையினர் பேரளி கிராமத்தில் உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் கொரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்று பார்வையிட்டு சோதனை மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்