குடும்பத்தகராறில் மாமனார் அடித்துக்கொலை
குன்னம் அருகே குடும்பத்தகராறில் மாமனார் அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக மருமகன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.;
குன்னம்:
சலவை தொழிலாளி
அரியலூர் மாவட்டம், தாமரைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லமுத்து(வயது 45). சலவை தொழிலாளி. இவரது மகள் ரஞ்சிதா(27). இவருக்கும் பெரம்பலூர் மாவட்டம், கூடலூரை சேர்ந்த செல்வத்துக்கும்(40) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது செல்வம், ரஞ்சிதா ஆகியோருக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இப்பிரச்சினையை தீர்ப்பதற்காக ரஞ்சிதாவின் தந்தை செல்லமுத்து நேற்று காலை கூடலூர் கிராமத்திற்கு வந்தார். அங்கு வீட்டில் இருந்த செல்வத்திடம் நடந்த சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தார்.
சாவு
இதையடுத்து இருவருக்கும் நடந்த பேச்சுவார்த்தை முற்றி வாக்குவாதமாகி கைகலப்பு ஏற்பட்டது. அப்போது செல்வம் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து செல்லமுத்துவை தாக்கியதாகவும், அவர் அடி தாங்க முடியாமல் கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
4 பேர் கைது
இது குறித்து செல்வம், செல்வத்தின் அண்ணன் சேகர்(45), தந்தை பூமாலை(70), தாய் மலர்விழி(60) மற்றும் உறவினர்கள் முத்துமணி, ராஜதுரை, முத்துமணியின் மகன் மணிகண்டன் ஆகிய 7 பேர் மீது மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் செல்வம், சேகர், பூமாலை, மலர்விழி ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டு பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.