பெங்களூரு, பெலகாவியில் தற்காலிக மயானங்களில் உடல்கள் தகனம்

பெங்களூரு, பெலகாவியில் தற்காலிக மயானங்களில் கொரோனாவுக்கு பலியானவர்கள் உடல்கள் தகனம் செய்யப்பட்டது.

Update: 2021-04-30 19:33 GMT
பெங்களூரு: பெங்களூரு, பெலகாவியில் தற்காலிக மயானங்களில் கொரோனாவுக்கு பலியானவர்கள் உடல்கள் தகனம் செய்யப்பட்டது.

காத்து கிடக்கும் அலவம் 

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பும், அதனால் ஏற்படும் உயிரிழப்பும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. புதிதாக வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்படுவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் கிடைப்பது இல்லை.

 அதுபோல உயிரிழப்பவர்களின் உடல்களை தகனம் செய்வதிலும் தாமதம் ஏற்படுகிறது. அதாவது கொரோனாவுக்கு இறப்பவர்களின் உடல்கள் மத்திய அரசின் வழிகாட்டுதல்படி அடக்கம் செய்யப்படுவதால், ஒரு உடலை அடக்கம் செய்ய குறைந்தது ½ மணி நேரமாவது ஆகிறது. 

இதனால் மின்மயானங்கள் முன்பு கொரோனாவுக்கு இறறந்தவர்களின் உடல்களை தாங்கி கொண்டு ஆம்புலன்சுகள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. குறிப்பாக பெங்களூருவில் உள்ள மேடி அக்ரஹாரா, சும்மனஹள்ளி, பீனியா உள்பட 7 மின்மயானங்கள் முன்பும் ஆம்புலன்சுகள் அணிவகுத்து நின்றது சமூக வலைத்தளங்களில் வைரலாகின. மேலும் கொரோனாவுக்கு இறந்தவர்கள் உடல்களை அடக்கம் செய்ய உறவினர்கள் காத்து கிடக்கும் அவலமும் நடந்தன. 

ஒரே நேரத்தில் தகனம் 

இதனால் பெங்களூரு உள்பட சில பகுதிகளில் தற்காலிக மயானங்கள் அமைத்து கொரோனாவுக்கு உயிரிழப்பவர்கள் உடல்களை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி பெங்களூரு அருகே தாவரகெரே பகுதியில் நிலம் ஒதுக்கப்பட்டு தற்காலிக மயானம் அமைக்கப்பட்டது. 

அதுபோல பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா அருகே கிட்டேனஹள்ளி, பெலகாவி ஆகிய பகுதிகளில் தற்காலிக மயானங்கள் அமைக்கப்பட்டன. அந்த மயானங்களில் நேற்று முதல் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் உடல்கள் தகனம் செய்யப்பட்டன. 

தாவரகெரே மயானத்தில் 26 உடல்களும், கிட்டேனஹள்ளியில் 5 உடல்களும், பெலகாவியில் 7 உடல்களும் ஒரே நேரத்தில் தகனம் செய்யப்பட்டன. 

மேலும் செய்திகள்