18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி ஒத்திவைப்பு

கிணத்துக்கடவில் கொரோனா தடுப்பூசி தடுப்பாடு ஏற்பட்டுள்ளதால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2021-05-01 17:22 GMT
கிணத்துக்கடவு

கிணத்துக்கடவில் கொரோனா தடுப்பூசி தடுப்பாடு ஏற்பட்டுள்ளதால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தடுப்பூசி போடும் பணி

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

 இதன் அடிப்படையில் ஏற்கனவே முதல் கட்டமாக 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 2-ம் கட்டமாக 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கும் கொரோனோ தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கிணத்துக்கடவு அரசு மருத்துவமனை, சொக்கனூர், வடசித்தூர் ஆகிய துணை ஆரம்ப சுகாதார நிலையத்திலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது.

 தற்போது கொரோனா 2-வது வேலை வேகமாக பரவி வருவதால், கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது. இதையடுத்து தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

18 வயதுக்கு மேற்பட்டவர்கள்

இதனையடுத்து கிணத்துக்கடவு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சித்ரா கோவை மருத்துவ சுகாதார துறை அதிகாரியிடம் தங்கள் பகுதிக்கு கூடுதல் தடுப்பூசி தரவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த நிலையில் மே 1-ந் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் கிணத்துக்கடவு பகுதியில் ஏற்கனவே 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கே கொரோனா தடுப்பூசி போதிய அளவு இருப்பு இல்லாததால் நேற்று 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி ஒத்திவைக்கப்பட்டது. 

தட்டுப்பாடு

இதுகுறித்து மருத்துவ அதிகாரிகள் கூறியதாவது:- கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கோவையில் இருந்து தடுப்பூசி மருந்து கேட்டு வாங்கி அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வந்தது.  தற்போது தடுப்பூசி மருந்து தட்டுப்பாடு காரணமாக நேற்று தடுப்பூசி போடும்  பணி தடைப்பட்டது. இதனால் ஆஸ்பத்திரி வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.

தற்போது கோவைக்கு கொரோனா தடுப்பூசி மருந்து வந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இதில் கிணத்துக்கடவுக்கு கூடுதலாக தடுப்பூசி மருந்து கேட்டுள்ளோம். இந்த மருந்து வந்ததும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும். 

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக நேற்று 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டாம் என்றும், மறு உத்தரவு வரும் வரை காத்திருங்கள் என்றும் கூறியதால் தடுப்பூசி போடும் பணி ஒத்திவைக்கப்பட்டது.  இவ்வாறு அவர்கள் கூறினார்.

மேலும் செய்திகள்