வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த தென்னை மரங்களில் மஞ்சள் ஒட்டுப்பொறியை கட்ட வேண்டும்

வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த தென்னை மரங்களில் மஞ்சள் ஒட்டுப்பொறியை கட்ட வேண்டும் என்று விவசாயிகளுக்கு வேளாண் துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.

Update: 2021-05-01 17:22 GMT
கிணத்துக்கடவு

வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த தென்னை மரங்களில் மஞ்சள் ஒட்டுப்பொறியை கட்ட வேண்டும் என்று விவசாயிகளுக்கு வேளாண் துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.

வெள்ளை ஈ தாக்குதல்

கிணத்துக்கடவு தாலுகாவில் தென்னை விவசாயம் முக்கிய தொழிலாக விளங்கி வருகிறது. கிணத்துக்கடவு தாலுகாவில் மட்டும் கிணத்துக்கடவு, கப்பளாங்கரை, தேவணாம்பாளையம், ஜக்கார்பாளையம், சிறுகளந்தை, வகுத்தம்பாளையம், காணியாலாம்பாளையம், செட்டியக்காபாளையம், கோவில்பாளையம், வடசித்தூர், மெட்டுவாவி, சொக்கனூர் உள்ளிட்ட பல பகுதிகளில் 29 ஆயிரத்து 900 ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது.

தற்போது கிணத்துக்கடவு பகுதியில் கடுமையான வெயிலும், இரவு நேரங்களில் குளிர்ச்சியான சூழ்நிலையும் நிலவி வருகிறது. இதன் காரணமாக தென்னை மரங்களில் வெள்ளை ஈக்கள் தாக்குதல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 

இதனை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் உள்ள 8 ஆயிரத்து 465 ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாயிகளுக்கு மஞ்சள் ஒட்டுப்பொறி வழங்கப்பட்டுள்ளது.

மஞ்சள் ஒட்டுப்பொறி

இந்த நிலையில் கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சித்ராதேவி, வருத்தம்பாளையம் பகுதியில் உள்ள தென்னந்தோப்புகளில் விவசாயிகள் தென்னை மரங்களை கட்டி வைத்திருந்த மஞ்சள் ஒட்டுப்பொறியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், தென்னை மரங்களில் மஞ்சள் நிற பிளாஸ்டிக் காகிதத்தை கட்டி அதில் விளக்எண்ணையை தடவி வைப்பதே மஞ்சள் ஒட்டுப்பொறி ஆகும். தென்னை தோட்டங்களில் 1 ஏக்கருக்கு 20 மரங்களில் மஞ்சள் ஒட்டுப்பொறி பொருத்த வேண்டும். 

இவ்வாறு வைத்தால் இரவு 7 மணி முதல் 9 மணி வரை தென்னந்தோப்புகளில் நடமாடும் வெள்ளை ஈக்கள் அந்த மஞ்சள் ஒட்டுப்பொறியில் சிக்கி இறந்து விடும். இதனால் விவசாயிகள் தென்னை மரங்களில் ஏற்படும் வெள்ளை ஈக்கள் தாக்குதலை கட்டுப்படுத்தி, தென்னை மரங்களை பாதுகாக்கலாம் என்று தெரிவித்தார். 

இதில், அவருடன் துணை வேளாண்மை இயக்குனர் பெருமாள்சாமி, கிணத்துக்கடவு வேளாண்மை உதவி இயக்குனர் ஆனந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்