கொரோனா புதிய கட்டுப்பாடுகள் அமல்: கடைகள் அடைப்பு; வீதிகள் வெறிச்சோடின

கொரோனா புதிய கட்டுப்பாடுகள் அமலானதை தொடர்ந்து தேனியில் கடைகள் அடைக்கப்பட்டன. வீதிகள் வெறிச்சோடின

Update: 2021-05-06 16:46 GMT

தேனி:
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் புதிதாக பல்வேறு கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. இதன்படி அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்க வேண்டும். பஸ்களில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். பலசரக்குகள் மற்றும் காய்கறி கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும். அந்த கடைகள் தவிர இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று தேனி மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் உள்ள கடைவீதிகளில் மளிகை கடைகள், மருந்து கடைகள், காய்கறி கடைகளை தவிர மற்ற கடைகள் மூடப்பட்டன. 
வெறிச்சோடின
தேனி நகரில் முக்கிய கடைவீதியாக உள்ள பகவதியம்மன் கோவில் தெரு, எடமால் தெரு ஆகிய இடங்களில் நேற்று காலையில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. பிற்பகலில் கடைகள் அடைக்கப்பட்டதால் வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. மதுரை சாலை, கம்பம் சாலை, பெரியகுளம் சாலை உள்ளிட்ட பகுதிகளிலும் பிற்பகலில் கடைகள் அடைக்கப்பட்டன. மருந்துக்கடைகள் மட்டும் இரவு வரை திறந்து இருந்தன. வீதிகளிலும் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது. அதுபோல் அரசு அலுவலகங்களில் குறைவான ஊழியர்களே பணியில் ஈடுபட்டனர். தேனி பஸ் நிலையம் பகல் நேரத்திலும் வெறிச்சோடி காணப்பட்டது. பிற்பகலில் பஸ் நிலையத்தில் உள்ள கடைகள் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டன.

மேலும் செய்திகள்