அரசின் உத்தரவை மீறி மளிகை, காய்கறி தவிர இதர கடைகளும் திறப்பு; மதியம் 12 மணிக்கு மூடல்

அரசின் உத்தரவை மீறி பெரம்பலூர் மாவட்டத்தில் மளிகை, காய்கறி கடைகளை தவிர, இதர கடைகளும் திறக்கப்பட்டன. அவை மதியம் 12 மணிக்கு மூடப்பட்டன.

Update: 2021-05-06 20:12 GMT
பெரம்பலூர்:

புதிய கட்டுப்பாடுகள்
கொரோனா 2-வது அலையால் தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையொட்டி தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதன்படி தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமலில் இருந்து வருகிறது. ஏற்கனவே சினிமா தியேட்டர்கள், 3 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட கடைகள், நகர்ப்பகுதியில் சலூன் கடைகள், அழகு நிலையங்கள் திறக்கப்படவில்லை.
இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளாக நேற்று முதல் வருகிற 20-ந்தேதி வரை மளிகை, காய்கறிக் கடைகள் தவிர, இதர கடைகளை திறக்க தமிழக அரசு தடை விதித்திருந்தது.
இதர கடைகளும் திறப்பு
மேலும் மருந்து கடைகள், பால் வினியோகம் போன்ற அத்தியாவசிய பணிகள் வழக்கம்போல எந்தத் தடையுமின்றி செயல்படும் என்றும், மீன், இறைச்சி கடைகளில் காலை 4 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் மளிகை, காய்கறி கடைகள் அரசின் உத்தரவின்படி காலை முதல் மதியம் 12 மணி வரை திறந்திருந்தன. இதனால் அந்த கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.
ஆனால் அந்த கடைகளில் கொரோனா விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை. மேலும் அரசின் உத்தரவை மீறி பெரம்பலூர் மாவட்டத்தில் இதர கடைகளில் ஒரு சில கடைகளை தவிர பெரும்பாலான கடைகள் வழக்கம்போல் திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது. ஆனால் அந்த கடைகள் மதியம் 12 மணிக்கு மூடப்பட்டன.
அபராதம் விதிப்பு
அதில் சில கடைகள் மதியம் 12 மணிக்கு மேலும் பூட்டப்படாமல், தொடர்ந்து வியாபாரம் நடைபெற்றது. இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் அந்த கடைகளுக்கு அபராதம் விதித்தனர். மேலும் போலீசார் மளிகை, காய்கறி கடைகள், மீன், இறைச்சி கடைகள் தவிர மற்ற கடைகளை திறக்கக்கூடாது. மீறி திறந்தால் அதிகாரிகள் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பதோடு, கடைகளை பூட்டி ‘சீல்' வைப்பார்கள் என்று வணிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் நடந்த கூட்டத்தில் வணிகர்களுக்கு, ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள் குறித்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தெரிவித்து, அறிவுரை வழங்கினார்.
பெரம்பலூர் நகர்ப்பகுதியை தொடர்ந்து, ஊரக பகுதிகளிலும் நேற்று முதல் சலூன் கடைகள், அழகு நிலையங்கள் திறக்கப்படவில்லை. ஓட்டல்கள், டீக்கடைகளில் பார்சல் மட்டும் வழங்கப்பட்டது. மேலும் டீக்கடைகள் மதியம் 12 மணிக்கு அடைக்கப்பட்டது. அம்மா உணவகங்கள் வழக்கம் போல் இயங்கியது.
அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்கள்
அரசு மற்றும் தனியார் பஸ்கள் 50 சதவீத பயணிகளுடன் இயக்கப்பட்டது. அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கியது. இரவு நேர ஊரடங்கால் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகள், தற்போது புதிய கட்டுப்பாடுகளால் காலை 8 மணிக்கு திறக்கப்பட்டன. இதனால் காலையிலேயே டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. அங்கு சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை.

மேலும் செய்திகள்