ஈரோட்டில் அதிக பயணிகளை ஏற்றிவந்த ஷேர் ஆட்டோ பறிமுதல்; கலெக்டர் கதிரவன் நடவடிக்கை

ஈரோட்டில் அதிக பயணிகளை ஏற்றிவந்த ஷேர் ஆட்டோவை பறிமுதல் செய்து கலெக்டர் கதிரவன் நடவடிக்கை எடுத்தார்.

Update: 2021-05-06 23:07 GMT
ஈரோடு
ஈரோட்டில் அதிக பயணிகளை ஏற்றிவந்த ஷேர் ஆட்டோவை பறிமுதல் செய்து கலெக்டர் கதிரவன் நடவடிக்கை எடுத்தார்.
அதிக பயணிகள்
ஈரோடு காசிபாளையம் கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரன். இவருக்கு சொந்தமான ஷேர் ஆட்டோவை ஈரோட்டை சேர்ந்த பசுபதி என்பவர் ஓட்டி வந்தார்.
இந்த நிலையில் நேற்று பசுபதி சோலார் பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஈரோடு பஸ் நிலையம் நோக்கி வந்தார். பிரப் ரோடு பகுதியில் வந்தபோது, அந்த வழியாக வந்த கலெக்டர் சி.கதிரவன் ஷேர் ஆட்டோவில் அதிகமாக பயணிகள் இருப்பதை பார்த்தார்.
ஷேர் ஆட்டோ பறிமுதல்
உடனடியாக கலெக்டர் சி.கதிரவன் டிரைவரிடம் காரை நிறுத்தச் சொல்லி காரை விட்டு வெளியே வந்தார். பின்னர் ஷேர் ஆட்டோவை நிறுத்தி பார்வையிட்டார். அப்போது ஷேர் ஆட்டோவில், கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் சமூக இடைவெளியின்றி 8 பயணிகள் இருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து ஷேர் ஆட்டோவை பறிமுதல் செய்து, டிரைவர் பசுபதியின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யக்கோரி கலெக்டர் கதிரவன் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து ஈரோடு டவுன் போலீசார் அந்த ஷேர் ஆட்டோவை பறிமுதல் செய்து ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

மேலும் செய்திகள்