காஞ்சீபுரத்தில் விதிகளை மீறிய கடைகளை அடைக்க நகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தல்

காஞ்சீபுரத்தில் விதிகளை மீறிய கடைகளை அடைக்க நகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தினர்.

Update: 2021-05-07 03:58 GMT
காஞ்சீபுரம்,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நேற்று முதல் பால்கடைகள், மருந்து கடைகள், மளிகைகடைகள் மட்டும் மதியம் 12 மணி வரை திறந்திருக்கலாம். மற்ற கடைகள் அனைத்தும் மூடவேண்டும் என்ற புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து காஞ்சீபுரம் பெருநகராட்சி ஆணையர் மகேஸ்வரி தலைமையில் 15-க்கும் மேற்பட்ட நகராட்சி அதிகாரிகள் அத்தியாவசியமில்லாத கடைகளை மூடுமாறு நேரில் சென்று வலியுறுத்தினார்கள்.

காஞ்சீபுரத்தின் பிரதான சாலைகளான காந்தி ரோடு, காமராஜர்சாலை, அரசு ஆஸ்பத்திரி சாலை, ெரயில்வே சாலை போன்ற பகுதிகளில் சென்று கடைகளை அடைக்கும்படி கூறினர்.

வணிக நிறுவனங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத காரணங்களுக்கு 9 கடைகளுக்கு தலா ரூ.500 வீதமும், ஒரு கடைக்கு ரூ.5 ஆயிரமும் அபராதமாக வசூலிக்கப்பட்டது. முககவசம் அணியாதவர்கள் 48 பேரிடம் இருந்து ரூ.200 வீதம் ரூ.9 ஆயிரத்து 600 அபராதம் வசூலித்தது உள்பட ரூ.19 ஆயிரத்து 600-ஐ நகராட்சி அதிகாரிகள் அபராதமாக வசூலித்தனர்.

இந்தபணியில் நகராட்சி என்ஜினீயர்் ஆனந்த ஜோதி, நகரமைப்பு ஆய்வாளர் வெங்கடேசன், நகரமைப்பு அலுவலர் சுப்புத்தாய் உள்பட அதிகாரிகள் பலரும் ஈடுபட்டிருந்தனர்.

அரசின் புதிய கட்டுப்பாடுகளை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மேல் எந்த கடைகளும் இருக்க கூடாது என்ற அறிவிப்பின் காரணமாக காஞ்சீபுரம்் நகரமே வெறிச்சோடி காணப்பட்டது. நண்பகல் 12 மணி வரை காய்கறிக்கடைகள், மளிகை கடைகள் போன்றவற்றில் அதிக அளவில் கூட்டம் இருந்ததை காண முடிந்தது.

நண்பகல் 12 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால் காஞ்சீபுரம் நகரமே வெறிச்சோடி காணப்பட்டது. ஒரு சிலர் மட்டும் இருசக்கர வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அரசு பஸ்கள் ஒரு சில பயணிகளுடன் இயக்கப்பட்டன.

மேலும் செய்திகள்