மடிப்பாக்கத்தில் மாநகர பஸ்சில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

மடிப்பாக்கத்தில் மாநகர பஸ்சில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2021-05-07 05:11 GMT
ஆலந்தூர், 

சென்னை திருவான்மியூரில் இருந்து கீழ்கட்டளை நோக்கி நேற்று காலை மாநகர பஸ் சென்றது. பஸ்சில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ்சை டிரைவர் சிவானந்தம் (வயது 53) என்பவர் ஓட்டிச்சென்றார். கண்டக்டராக சங்கரன் (52) என்பவர் பணியில் இருந்தார்.

மடிப்பாக்கம் மெயின் ரோடு சதாசிவம் நகர் அருகே வந்தபோது திடீரென மாநகர பஸ்சின் பின்புறத்தில் இருந்து கரும்புகை வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர், பஸ்சை சாலையோரம் நிறுத்திவிட்டு பயணிகளை கீழே இறங்கும்படி கூறினார். அவசர அவசரமாக பயணிகள் கீழே இறங்கினர். அதற்குள் பஸ் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் வேளச்சேரி தீயணைப்பு நிலைய அலுவலர் பஞ்சவர்ணம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்துவந்து மாநகர பஸ்சில் எரிந்த தீயை அணைத்தனர். உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. நல்லவேளையாக இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மாநகர பஸ்சில் தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் குறித்து மடிப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்