நகராட்சி மார்க்கெட் கடைகளை இடமாற்றம் செய்ய ஆலோசனை

ஊட்டியில் நகராட்சி மார்க்கெட் கடைகளை இடமாற்றம் செய்ய ஆலோசனை நடத்தப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

Update: 2021-05-07 14:20 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மதியம் 12 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட்டு வருகிறது. அந்த நேரத்தில் அத்தியாவசிய பொருட்களை வாங்க பொதுமக்கள் அதிகம் பேர் வருகின்றனர். இதனால் வாகனங்கள் முன்னேறி செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் ஆகியோர் ஊட்டி மணிக்கூண்டு, மத்திய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் திடீரென ஆய்வு செய்தனர். அப்போது 12 மணிக்கு பிறகு தேவை இல்லாமல் வாகனங்களில் சுற்றியவர்களை தடுத்து நிறுத்தி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அரசு பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் முககவசம் அணிந்து செல்கின்றார்களா? என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

அதன்பின்னர் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் உள்ள படுக்கைகளில் 600-க்கும் மேற்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அரசு தெரிவித்த வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும். மதியம் 12 மணிக்குள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி செல்ல வேண்டும். அவசியம் இல்லாமல் வெளியே வருவதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. தேவையில்லாமல் வெளியில் வருவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் சமூக இடைவெளி, முககவசம் அணிவது, அடிக்கடி கை கழுவுவது அவசியம். ஊரடங்கு நேரத்திலும் கூட போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. மார்க்கெட், காய்கறி கடைகள் மற்றும் இறைச்சி கடைகளில் அதிக அளவில் பொதுமக்கள் கூடுகின்றனர்.

மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்த தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் கடைகள் நெருக்கமாக உள்ளதால், அவற்றை இடமாற்றம் செய்வது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது ஊட்டி நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்