கட்டுப்பாடுகளை மீறி திறந்திருந்த 6 கடைகளுக்கு ‘சீல்’

கட்டுப்பாடுகளை மீறி திறந்திருந்த 6 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

Update: 2021-05-07 20:44 GMT
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை வணிக நிறுவனங்கள் கடைபிடிக்கவில்லை. நேற்று நகராட்சி ஆணையர் மனோகர், சுகாதார ஆய்வாளர் முத்துமுகமது மற்றும் பணியாளர்கள் நகர் முழுவதும் சோதனை மேற்கொண்டனர். அப்போது மதியம் 12 மணிக்கு மேல் திறந்து வைக்கப்பட்டு இருந்த செல்போன், மளிகை கடைகள் உள்பட 6 கடைகளுக்கு ‘சீல்’ வைத்தனர்.
இதற்கிடையே நகரில் உள்ள அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் அனைத்து படுக்கைகளும் நோயாளிகளால் நிறைந்துள்ளன. பொதுமக்கள் யாரும் அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை கடைபிடிப்பது இல்லை. நகர் முழுவதும் முக்கிய வீதியில் மட்டும் கடைகள் மூடப்படுகின்றன. மற்ற அனைத்து இடங்களிலும் கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் செய்யப்படுகிறது.  டீக்கடைகள், சிறிய உணவு விடுதிகளில் பலர் இருக்கையில் அமர்ந்து உணவு சாப்பிடுகின்றனர். மார்க்கெட் தெரு, பஸ் நிலையம் ஆகிய இடங்களில் புற்றீசல்போல் தரைக்கடைகள் அதிகரித்து வருகின்றன. சுமைகூலி மூலம் நகராட்சிக்கு அதிக வருவாய் வருவதால் கடைகள் பெருகுவதை நகராட்சி, வருவாய், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்டுகொள்வது இல்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் செய்திகள்