ஒரே கிராமத்தை சேர்ந்த 10 பேர் அடுத்தடுத்து சாவு

சாத்தூர் அருகே ஒரே கிராமத்தை சேர்ந்த 10 பேர் அடுத்தடுத்து இறந்தனர்.

Update: 2021-05-07 21:21 GMT
விருதுநகர்,
சாத்தூர் அருகே ஒரே கிராமத்தை சேர்ந்த 10 பேர் அடுத்தடுத்து இறந்தனர். 
10 பேர் சாவு 
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சல்வார்பட்டி கிராமம் உள்ளது. இங்கு 3 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயம் மற்றும் பட்டாசு ஆலைகளில் வேலை பார்த்து வருகின்றனர். 
இந்த கிராமத்தில் கடந்த ஒரு வாரத்தில் அடுத்தடுத்து 7 ஆண்கள், 3 பெண்கள் என 10 பேர் மர்மமான முறையில் இறந்துள்ளனர். 
காய்ச்சல் அறிகுறி 
இதனால் அந்த கிராம மக்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இறந்தவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததாக கூறப்படுகிறது. 
இதில் ஒருவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இறந்துள்ளார். எனவே அந்த கிராமத்தில் கொரோனா நோய் தொற்று பலருக்கும் ஏற்பட்டு இருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. 
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மாவட்ட சுகாதார துறையின் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சல்வார்பட்டி கிராமத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். 
கிருமி நாசினி 
இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  தொடர்ந்து கிராமம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பரிசோதனை முடிவுகள் வந்தால் தான் வேறு யாருக்கும் கொரோனா தொற்று இருக்கிறதா? என்ற விவரங்கள் தெரியவரும். 
இருப்பினும் சல்வார்பட்டி கிராமத்தில் சுகாதார துறையினர் முகாமிட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். 

மேலும் செய்திகள்