காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆய்வு கூட்டம் கண்காணிப்பு அலுவலர் தலைமையில் நடந்தது

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆய்வு கூட்டம் கண்காணிப்பு அலுவலர் மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது.

Update: 2021-05-08 01:00 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனர் சுப்பிரமணியன் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.

இதற்கு மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் காய்ச்சல், கொரோனா தடுப்பூசி மற்றும் பரிசோதனை முகாம்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

குன்றத்தூர் பேரூராட்சி பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாம் மற்றும் பெரிய தெருவில் நடைபெற்று வந்த கொரோனா பரிசோதனை முகாமை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டனர். இதன் தொடர்ச்சியாக எழுச்சூர் பகுதியில் நடைபெற்று வரும் கொரோனா தொற்று உள்ளவர்கள் சிகிச்சை பெற்று வரும் மையத்தை பார்வையிட்டு அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர்.

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் காஞ்சீபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து அனைத்து அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

பின்னர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரியில் மொத்தம் 672 படுக்கைகள் உள்ளன. இதில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 260 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் மற்றும் 115 ஆக்சிஜன் வசதியில்லாத படுக்கைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 23 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகள் மட்டும் காலியாக உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய இருக்கைகள் காலியாக உள்ள பட்சத்தில் நோயாளிகளை அங்கு அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் தனியார் ஆஸ்பத்திரி கல்லூரிகளில் 1180 படுக்கைகள் கொரோனா சிகிச்சை மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளது.

இதில் ஆக்சிஜன் வசதியுடன் 385 படுக்கைகளும் 760 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்கள் அனைவரும் அரசு வெளியிட்டுள்ள வழிமுறைகளை தவறாமல் கடைபிடித்து தங்களையும் தங்களது குடும்பத்தையும் பாதுகாத்து கொள்ள வேண்டும்.

அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே வரும் பட்சத்தில் முககவசம், சமூக இடைவெளி போன்றவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில பெருகிவரும் நோய் தொற்றை கட்டுப்படுத்த மேலும் 350 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை ஒரு வார காலத்திற்குள் தயார் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் துரித கதியில் நடந்து வருகிறது.

மேலும் ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் மற்றும் உத்திரமேரூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு ஆஸ்பத்திரிகளில் கூடுதலாக 145 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் 10 நாட்களுக்குள் தயார் செய்ய மாவட்ட நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் காவல்துறை தலைவர் (பயிற்சியகம்) சாரங்கன், காவல்துறை துணைத்தலைவர் சாமுண்டீஸ்வரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகபிரியா மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்