சுருக்குமடி, இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்தால் கடும் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை

சுருக்குமடி, இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

Update: 2021-05-08 01:12 GMT
திருவள்ளூர், 

தமிழக அரசு மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் தமிழ்நாடு கடற்கரையில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளான சுருக்குமடி வலை மற்றும் இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பில் ஈடுபடும் போது அதிக கடல் பரப்பு மீன் பிடிப்புக்கு உட்படுத்தப்பட்டு பல வகை மீன்கள் அதிக அளவில் பிடிபடுவதுடன் கடலின் அடிப்பகுதியில் உள்ள இயற்கை வளம் பாதிப்படைகிறது.

இதன் காரணமாக மீன்களின் இனப்பெருக்கம் தடுக்கப்பட்டு மொத்த மீன் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. மீன்பிடி தடைகாலம் அடுத்த மாதம் 14-ந்தேதி வரை செயல்படுத்திட அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடும் நடவடிக்கை

தொடர்ந்து மீனவர்கள் யாரும் மேற்குறிப்பிட்ட காலங்களில் மேற்காணும் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடி தொழிலில் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.

மீனவர்கள் எவரேனும் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை வைத்திருந்தால் சம்பந்தப்பட்ட மீன்வளத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைக்க தவறும் பட்சத்தில் எதிர்வரும் காலங்களில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை கொண்டு மீன் பிடிப்பது தெரியவரும் பட்சத்தில், பெரிதும் லாபம் தரும் நோக்கத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மீன் விற்பனை மற்றும் வினியோகம் செய்திடும் மீனவர்கள் மீதும் தமிழ்நாடு அரசிதழ் தொகுப்பில் குறிப்பிட்டுள்ளவாறு தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ் பகுதி 3 துணை பகுதி-17 (7) ன் படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே திருவள்ளூர் மாவட்ட கடலோர மீனவர்கள் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை கொண்டு மீன் பிடிப்பதை முற்றிலும் தவிர்க்கவும.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்