நாளை முதல் முழு ஊரடங்கு அமல்: நெல்லையில் மளிகை, காய்கறி கடைகளில் மக்கள் குவிந்தனர்

தமிழகத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் 2 வாரங்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதையொட்டி நெல்லையில் மளிகை பொருட்கள், காய்கறிகள் வாங்குவதற்காக கடைகளில் மக்கள் குவிந்தனர்.

Update: 2021-05-08 19:21 GMT
நெல்லை:
தமிழகத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் 2 வாரங்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதையொட்டி நெல்லையில் மளிகை பொருட்கள், காய்கறிகள் வாங்குவதற்காக கடைகளில் மக்கள் குவிந்தனர்.

முழு ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில் படிப்படியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. இருந்தபோதிலும் கொரோனா வைரஸ் பரவல் குறைந்தபாடில்லை.

எனவே தமிழக அரசு நாளை (திங்கட் கிழமை) முதல் வருகிற 24-ந்தேதி வரை 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்துகிறது.
இதையொட்டி நேற்றும், இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு நேற்று மளிகை கடை, காய்கறி கடை உள்ளிட்ட அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன. காலை முதல் இரவு 9 மணி வரை இந்த கடைகள் தொடர்ந்து செயல்பட்டன.

கடைகளில் அலைமோதிய கூட்டம்

இதனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக, நெல்லை மாநகர பகுதிகளில் உள்ள கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. நாளை (திங்கட்கிழமை) முதல் அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கு நாட்களிலும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை காய்கறி, மளிகை கடைகள் திறந்திருக்கும் என அறிவித்திருந்தபோதும்கூட, பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக்கூடாது என்று கருதிய பொதுமக்கள் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க குவிந்தனர்.

நெல்லை டவுன் நயினார்குளம் குளம் கரையில் உள்ள காய்கறி கடைகள், டவுன் ரதவீதி பகுதியில் உள்ள காய்கறி, மளிகை கடைகள், பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதி மளிகை கடைகள், காய்கறி கடைகள் மற்றும் மகாராஜா நகர் உழவர் சந்தை, தற்காலிக உழவர் சந்தை பகுதிகளில் நேற்று காலை முதலே பொதுமக்கள் குவிந்தனர்.

அவர்கள் ஒரு மாதத்துக்கு தேவையான மளிகை பொருட்களையும், ஒருவாரத்துக்கு தேவையான காய்கறிகளையும் வாங்கி சென்றனர். இதேபோன்று முழு ஊரடங்கு நாட்களில் சலூன் கடைகள் திறக்கப்படாது என்பதால், முடிதிருத்தம் செய்து கொள்வதற்காக சலூன் கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

மேலும் செய்திகள்