வாழை மரங்களுக்கு நிவாரணம் வேண்டும்
திருச்சுழி, நரிக்குடி பகுதிகளில் சூறாவளி காற்றால் சேதமடைந்த வாழை மரங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
காரியாபட்டி,
திருச்சுழி, நரிக்குடி பகுதிகளில் சூறாவளி காற்றால் சேதமடைந்த வாழை மரங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சூறாவளி காற்று
காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி ஆகிய பகுதிகளில் கடந்த 2 நாட்களாக அவ்வப்போது கன மழை பெய்து வந்தது.
தொடர்ந்து இந்த பகுதியில் மழை பெய்து வருவதால் பருத்தி, கடலை மற்றும் பயிர் வகைகளை விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்தநிலையில் காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி ஆகிய பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இந்த காற்றினால் வாழை மரங்கள் சேதமானது.
வாழை மரங்கள் சேதம்
இந்த காற்றினால் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் பெருத்த சேதம் அடைந்துள்ளனர்.
சூறாவளி காற்றினால் கல்லுமடம், திருமலைபுரம், நரிக்குடி அருகே மினாக்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள வாழை மரங்கள் சேதமானது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
திருச்சுழி, காரியாபட்டி, நரிக்குடி ஆகிய பகுதிகளில் வீசிய பலத்த சூறாவளி காற்றினால் வாழை மரங்கள் சேதமானது. கடன் வாங்கி சாகுபடி செய்தோம். ஆனால் அறுவடைக்கு முன்பு வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்து விட்டது. எனவே சேதமடைந்த பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.