சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் தலா 2 காய்ச்சல் சிறப்பு முகாம்கள் கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தகவல்

பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது.

Update: 2021-05-16 21:56 GMT
சென்னை, 

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி உள்ள நபர்களை கண்டறிந்து பரிசோதனைகள் மேற்கொள்ள ஏதுவாக காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கு உட்பட்ட 200 வார்டுகளில் தலா 2 முகாம்கள் என 400 சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த முகாம்களில் பொதுமக்களுக்கு உடல் வெப்பநிலை, உடலில் உள்ள ஆக்சிஜன் அளவு பரிசோதனை செய்யப்படும். கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகளான காய்ச்சல், இருமல், சளி உள்ளவர்களுக்கு ‘ஸ்கிரீனிங்’ பரிசோதனை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. அறிகுறியுள்ளவர்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் டாக்டர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பாதித்த நபரை கண்டறிந்து தனிமைப்படுத்தி தொற்று பரவுதலை கட்டுப்படுத்த முடியும். எனவே பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் நடைபெறும் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்களுக்கு சென்று பயனடைய வேண்டுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

அதேபோல் தொற்று அறிகுறி இருப்பவர்கள், தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்களுக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டால் அவர்களை அழைத்துச் செல்வதற்கு கார் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் நேற்று 644 பேர் இந்த கார் ஆம்புலன்சை பயன்படுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்