கூத்தாநல்லூர், வலங்கைமானில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றித்திரிந்தவர்களின் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

கூத்தாநல்லூர், வலங்கைமானில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றித்திரிந்தவர்களின் மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-05-19 14:05 GMT
கூத்தாநல்லூர்,

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உயிரிழப்புகளும் அதிகளவில் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு கடந்த 10-ந் ேததி முதல் முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளின்றி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என அரசு அறிவுறுத்தி உள்ளது.

ஊரடங்கு விதிகளின்படி மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும். ஜவுளி, நகை உள்ளிட்ட வணிக நிறுவனங்களை திறக்க கூடாது. பால், மருந்து கடைகள் வழக்கம்போல் திறந்திருக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.

கண்காணிப்பு பணி

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதிகளில் அரசு அறிவித்த ஊரடங்கு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா? என கூத்தாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னைஅபிராமி மற்றும் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகிறார்கள். கூத்தாநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் போலீசாரின் ரோந்து பணியும் நடைபெற்று வருகிறது. நேற்று லெட்சுமாங்குடி 4 வழிச் சாலையில் தடுப்புகள் ஏற்படுத்தி போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.

மோட்டார் சைக்கிள் பறிமுதல்

அப்போது ஊரடங்கை மீறி வெளியே சுற்றித்திரிந்தவர்களின் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து இன்ஸ்பெக்டர் அன்னை அபிராமி கூறுகையில், ‘அரசு அறிவிப்பின்படி ஊரடங்கு நேரத்தில் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும். அப்போது தான் நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும். அத்தியாவசிய தேவைகளின்றி வெளியே வாகனங்களில் வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். ஊரடங்கு அமலில் இருப்பதால் கூத்தாநல்லூர் போலீஸ் சரக பகுதிகள் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது’ என்றார்.

நீடாமங்கலம்

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

நீடாமங்கலம்-தஞ்சை சாலையில் அண்ணாசிலை பகுதி, கோவில்வெண்ணி சோதனைச்சாவடி, நீடாமங்கலம் பெரியார் சிலைப்பகுதி உள்ளிட்ட இடங்களில் போலீசாரின் கண்காணிப்பு பணி நடந்தது. அப்போது மோட்டார் சைக்கிளில் அத்தியாவசிய தேவைகளின்றி வெளியே சுற்றியவர்களை போலீசார் வழிமறித்து எச்சரித்தனர். மோட்டார் சைக்கிளில் 2-க்கும் மேற்பட்டவர்கள் வந்தால் அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

மன்னார்குடி

மன்னார்குடி நகரில் பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் 16 இடங்களில் சாலை தடுப்புகளை அமைத்து உள்ளனர். மோட்டார் சைக்கிள், காரில் வந்தவர்களை போலீசார் வழிமறித்து அத்தியாவசிய தேவையின்றி வெளியே வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர். தடுப்புகள் அமைக்கப்பட்ட இடங்களை மன்னார்குடி உதவி கலெக்டர் அழகர்சாமி, துணை போலீஸ் சூப்பிரண்டு இளஞ்செழியன், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது போலீசாருக்கு பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கினர்.

வலங்கைமான்

வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி, அரித்துவாரமங்கலம், ஆவூர் கோவிந்தகுடி உள்ளிட்ட இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது தேவையின்றி வெளியே வந்தவர்களிடம் இருந்து 10-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்தனர்.

பேரளம்

பேரளம் கடைத்தெருவில் நேற்று எந்த காரணமுமின்றி மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்தவர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், 15 நிமிடங்கள் நிற்க வைத்து கொரோனா பரவும் நேரத்தில் வெளியே சுற்ற கூடாது என அறிவுறுத்தினார்.

மேலும் செய்திகள்