பலத்த காற்று, கடல் சீற்றத்தால் மலைபோல் குவியும் பாசி, தாழைசெடிகள்

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த காற்றுடன் கடல்சீற்றமாக உள்ளதால் பாசி,தாழை செடிகள் கடற்கரையில் ஒதுங்கி வருகின்றன.

Update: 2021-05-19 16:53 GMT
பனைக்குளம், 
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த காற்றுடன் கடல்சீற்றமாக உள்ளதால் பாசி,தாழை செடிகள் கடற்கரையில் ஒதுங்கி வருகின்றன.
தாழைசெடிகள்
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் டால்பின், கடல் பசு உள்ளிட்ட 3 ஆயிரத்துக்கும் அதிகமான அரிய கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இதுதவிர கடலுக்கு அடியில் மீன்கள் இனப்பெருக்கத்திற்கு முக்கிய பங்கு வகிக்கக்கூடிய அரியவகை பவளப்பாறைகள், பலவகையான பாசிகளும், தாழை செடிகள் அதிகஅளவில் உள்ளன.
இந்த நிலையில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த சில நாட்களாக வழக்கத்திற்கு மாறாக பலத்த காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள புதுமடம் முதல் மானாங்குடி மற்றும் நொச்சியூரணி வரையிலான கடற்கரை பகுதி முழுவதும் ஏராளமான பாசிகளும், தாழை செடிகளும் கரை ஒதுங்கி கிடக்கின்றன.
கடல் சீற்றம்
கடல் சீற்றம் அதிகம் உள்ளதால் அதிக நாட்டுப் படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. அதுபோல் மன்னார் வளைகுடா பகுதியில் தொடர்ந்து பலத்த காற்று வீசி வருவதுடன் கடல்சீற்றத்துடன் காணப்பட்டு வருவதால் பாசிகள் மற்றும் தாழை செடிகள் இன்னும் அதிகமாக கரை ஒதுங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்