கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஓரிரு நாட்களில் 60 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் பயன்பாட்டுக்கு வரும் அதிகாரி தகவல்

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஓரிரு நாட்களில் 60 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் நோயாளிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Update: 2021-05-19 17:31 GMT
கடலூர், 


கடலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இருப்பினும் நோயின் தாக்கம் குறையவில்லை.

கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு நாளொன்றுக்கு 500-க்கும் மேற்பட்டவர்கள் நோய்த்தொற்று அறிகுறிகளுடன் சிகிச்சைக்காக வருகிறார்கள். அவர்களுக்கு பரிசோதனை செய்தால் அதில் 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு உறுதியாகிறது. இதனால் மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லாத நிலை உள்ளது. 

மேலும் சில நேரங்களில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமல் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்கும் வகையில் கடலூர் அரசு மருத்துவமனையில் கூடுதலாக 160 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

60 ஆக்சிஜன் படுக்கை

இது பற்றி ஆஸ்பத்திரி  அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, நோயாளிகளுக்கு ஏற்ப கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் படுக்கை வசதிகள் போதுமானதாக இல்லை. இருப்பினும் இருக்கிற படுக்கை வசதிகளை வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றோம்.

 முதல்கட்டமாக 60 ஆக்சிஜன் படுக்கை வசதிகளை தயார் செய்து வருகிறோம். ஆனால் அதில் பணி செய்த ஊழியர்களுக்கு நோய்த்தொற்று அறிகுறி இருந்ததால் இந்த வேலையில் தொய்வு ஏற்பட்டது. தற்போது பணி முடியும் தருவாயில் உள்ளது. ஓரிரு நாட்களில் இந்த 60 ஆக்சிஜன் படுக்கைகளும் நோயாளிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். 

அதன் பிறகு மேலும் 100 படுக்கை வசதிகள் பொதுப்பணித் துறையால் மூலம் தயார் செய்யப்படும் என்றார்.

மேலும் செய்திகள்