எருமப்பட்டியில் தடையை மீறி திறக்கப்பட்ட ஜவுளி கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

எருமப்பட்டியில் தடையை மீறி திறக்கப்பட்ட ஜவுளி கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-05-19 18:34 GMT
எருமப்பட்டி:
தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படுகிறதா? என போலீசார், உள்ளாட்சி நிர்வாகத்தினர் அடிக்கடி ஆய்வு செய்து வருகிறார்கள். இந்தநிலையில் எருமப்பட்டி கடை வீதியில் தடையை மீறி செயல்பட்ட ஜவுளி கடைக்கு வருவாய்த்துறையினர் ரூ.1,000 அபராதம் விதித்தனர். இதேபோல் எருமப்பட்டி முட்டாஞ்செட்டி ரோட்டில் ஒரு ஜவுளி கடை திறக்கப்பட்டு வியாபாரம் நடந்து வருவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற சேந்தமங்கலம் தாசில்தார் சுரேஷ், தடையை மீறி கடையை திறந்ததற்காக உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும் ஊரடங்கு தடையை மீறி கடையை திறந்தால் சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். அப்போது துணை தாசில்தார் கிருஷ்ணவேணி, எருமப்பட்டி பேரூராட்சி இளநிலை உதவியாளர் தேவராஜன், வருவாய் ஆய்வாளர் சாலா, கிராம நிர்வாக அலுவலர் தமிழ்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த கடைக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்