கொரோனா தடுப்பூசி இல்லாததால் ஆத்திரம்: ஓசூர் அரசு மருத்துவமனையை பொதுக்கள் முற்றுகை

ஓசூரில் கொரோனா தடுப்பூசி இல்லாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-05-20 00:08 GMT
ஓசூர்,

ஓசூர் அரசு மருத்துவமனையில் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு சுமார் 300 பேர் வரை தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். மேலும் ஓசூர் மாநகராட்சி சுற்றுவட்டார பகுதிகளில் தினமும் 300 பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கொரோனா தொற்றில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள தடுப்பூசி ஒன்றே ஆயுதம் என்பதை உணர்ந்து, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு மக்கள் நாள்தோறும் படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று காலை முதல் ஏராளமானோர் கொரோனா தடுப்பூசி போட வந்து மருத்துவமனையில் காத்திருந்தனர். ஆனால் காலை 10 மணிக்கு வந்த ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை என கூறி காத்திருந்த பொதுமக்களை திருப்பி அனுப்ப முயன்றனர். இதனால் மருத்துவமனை ஊழியர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சென்ற தலைமை மருத்துவ அலுவலர் பூபதியை, மக்கள் முற்றுகையிட்டு தடுப்பூசி இல்லையென்றால் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்றும், காலை முதல் காத்திருந்த நிலையில் தற்போது தடுப்பூசி இல்லை என்பதா? என்று வாக்குவாதம் செய்தனர்.

அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய தலைமை மருத்துவ அலுவலர் வருத்தம் தெரிவித்து, இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாது என்றும், நாளை (இன்று) கண்டிப்பாக தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும் உறுதியளித்தார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்