கடலூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை

கடலூர் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

Update: 2021-05-20 16:56 GMT
கடலூர், 

கடலூரில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதற்கிடையே மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் ஆங்காங்கே மழை பெய்து வந்தது. ஆனால் கடலூரில் நேற்று காலை முதல் மாலை வரை வெயில் அடித்தது.

இதற்கிடையில் வங்கக் கடலின் மத்திய கிழக்கு மற்றும் வடக்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று வருகிற 22-ந்தேதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், இது அடுத்த புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.
இதனால் தெற்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்திருந்தது.

மழை

இதன் காரணமாக நேற்று கடலூரில் மாலை நேரத்தில் திடீரென குளிர்ந்த காற்று வீசியது. தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு பிறகு பலத்த காற்று வீசியது. இதனால் சாலை ஓரங்களில் உள்ள குப்பைகள் காற்றில் பறந்தன. அவசர தேவைக்காக சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் தவித்தனர்.

காற்றில் மணல், குப்பைகள், பிளாஸ்டிக் பைகள் பறந்ததால் வாகன ஓட்டிகள் திக்குமுக்காடினர்.கடைகளில் உள்ள விளம்பர பலகைகள் காற்றில் ஆடின. ஒரு சில இடங்களில் பதாகைகள் விழுந்தன. சாலையில் உள்ள தடுப்பு கட்டைகளும் காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் விழுந்தது. சற்று நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.

ஆறுதல்

இரவு 9 மணி வரை இந்த மழை நீடித்தது. அதன் பிறகு லேசாக சாரல் மழை பெய்த வண்ணம் இருந்தது.இருப்பினும் கடந்த சில நாட்களாக கோடை வெயிலால் அவதிப்பட்டு வந்த கடலூர் நகர மக்களுக்கு நேற்று பெய்த மழை சற்று ஆறுதலை அளித்தது.

இதேபோல் விருத்தாசலம், பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், பரங்கிப்பேட்டை என மாவட்டம் முழுவதும் நேற்று மாலை பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து பூமி குளிர்ச்சியானதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மேலும் செய்திகள்