தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி

தமிழகத்தின் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஷ்ரா கூறினார்.

Update: 2021-05-20 17:10 GMT
நாகர்கோவில்:
தமிழகத்தின் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஷ்ரா கூறினார்.
குமரி மாவட்டத்தில் ஆய்வு
குமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை  குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஷ்ரா நேற்று முன்தினம் இரவு குமரி மாவட்டம் வந்தார்.
பின்னர் அவர் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அரவிந்த் முன்னிலையில் பல்வேறு கொரோனா பாதுகாப்பு மையங்கள், காய்கறி சந்தைகள், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
ஆசாரிபள்ளம்   ஆஸ்பத்திரியில்...
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாத்து சிகிச்சைகள் அளிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள கோணம் அரசு தொழில்நுட்ப கல்லூரியை பார்வையிட்டு, தொல்லவிளை அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு சளி மாதிரிகள் சேகரித்து, பரிசோதனைகள் மேற்கொள்வது குறித்து அங்குள்ள டாக்டர்கள் மற்றும் செவிலியர்களிடம் கேட்டறிந்தார். மேலும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்றுநோய் பாதித்தவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், மருத்துவ வசதிகள், படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதிகள், சளி மாதிரிகள் சேகரித்து முடிவுகள் வழங்கப்படுவது ஆகியவை குறித்தும், நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா? என்பதை உறுதி செய்திடுமாறு மருத்துவக்கல்லூரி டீன் மற்றும் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு அறிவுறுத்தினார்.
அதைத்தொடர்ந்து நாகர்கோவில் கன்கார்டியா உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பாதுகாப்பு மையம், நாகர்கோவில் ஜெயசேகரன் மருத்துவமனை போன்றவற்றை ஆய்வு செய்தார்.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதி
கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் உட்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் தங்கு தடையின்றி கிடைப்பதற்காக வடசேரி பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக காய்கறி சந்தையில் ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியினை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியதோடு, சுற்றுப்புறங்களை முழு சுகாதாரத்தோடு வைத்திட சுகாதார ஆய்வாளர்களை அவர் அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து வடசேரி பெரியராசிங்கன் தெருவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டுள்ளதை பார்வையிட்டு, அப்பகுதி பொதுமக்களுக்கு தேவையான மருந்துகள், உணவுகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் குறித்த நேரத்தில் வழங்கிட, சம்பந்தப்பட்ட சுகாதார அலுவலர்களை அறிவுறுத்தினார்.
ஆய்வு கூட்டம்
தொடர்ந்து நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக சிறு கூட்டரங்கில், மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடைபெற்ற சுகாதாரத்துறையினர் கூட்டத்தில் கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஷ்ரா ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் கிருமிநாசினி தெளிப்பது உட்பட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மேற்கொண்டு முழு சுகாதாரத்தினை பேணிக் காத்திட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் 6,18,197 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் 700 படுக்கைகளும், பத்மநாபபுரம் அரசு மருத்துவமனையில் 244 படுக்கைகளும், கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 200 படுக்கை வசதிகளுடன் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதோடு ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் 242 படுக்கைகளும், பயோனியர் குமாரசாமி கல்லூரியில் 251 படுக்கைகளும், கோணம் அரசு தொழில்நுட்பக்கல்லூரியில் 275 படுக்கைகளுடன் கூடிய கொரோனா பராமரிப்பு மையங்கள் வாயிலாகவும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கோணம் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் கூடுதலாக 850 படுக்கை வசதிகளுடன் கூடிய, பராமரிப்பு மையம் செயல்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தடுப்பூசி போடும் பணி
கொரோனா பரிசோதனை மேற்கொள்பவர்களுக்கு 24 மணி நேரத்திற்குள் முடிவுகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஏதேனும், குறைகள் இருப்பின் மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியினை  முதல்-அமைச்சர் இன்று (அதாவது நேற்று) தொடங்கி வைத்துள்ளார். தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியினை கடைபிடித்து, தங்களை கொரோனா நோயிலிருந்து பாதுகாத்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிகாரிகள்
இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மெர்சி ரம்யா, பத்மநாபபுரம் உதவி கலெக்டர் சிவகுரு பிரபாகரன், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி டீன் திருவாசகமணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, இணை இயக்குனர் (மருத்துவப்பணிகள்) பிரகலாதன், மாவட்ட வழங்கல் அதிகாரி சொர்ணராஜ், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி சூப்பிரண்டு அருள்பிரகாஷ், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சுசீலா, நாகர்கோவில் மாநகராட்சி நகர்நல அதிகாரி கின்சால், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி பொது மருத்துவத் துறை தலைவர் பிரின்ஸ் பயஸ், ஜெயசேகரன் மருத்துவமனை அறக்கட்டளை நிர்வாகிகள் தேவபிரசாத், சாபு, ரஞ்சித் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஆரல்வாய்மொழி
பின்னர், தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஷ்ரா  நெல்லைக்கு புறப்பட்டு சென்றார். செல்லும் வழியில் ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு பணியில் இருந்த வருவாய்த்துறையினர் மற்றும் போலீசாரிடம் ‘இ-பதிவு’ முறையில் வாகனங்களை குமரிக்குள் அனுமதிக்கப்படுவது குறித்து கேட்டறிந்தார். ஆய்வின்போது மண்டல துணை தாசில்தார் சொர்ண பிரதாபன், தோவாளை தாசில்தார் தாஜ்நிஷா, பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயமாலினி ஆகியோர் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்