பொள்ளாச்சி நாச்சிமுத்து பிரசவ விடுதியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி விரைவில் போடப்படும்

பொள்ளாச்சி நாச்சிமுத்து பிரசவ விடுதியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி விரைவில் போடப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2021-05-20 17:37 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி நாச்சிமுத்து பிரசவ விடுதியில் 18  வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி விரைவில் போடப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாச்சிமுத்து பிரசவ விடுதி

கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து உள்ளது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டு இருக்கிறது. இதற்காக பொள்ளாச்சியில் நாச்சிமுத்து பிரசவ விடுதி தேர்வு செய்யப்பட்டு உள்ளது. 

இந்த மையத்தில் பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் வந்து முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

தடுப்பூசி மையம் 

பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, வால்பாறை தாலுகா பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு கொரோன தடுப்பூசி மையமாக பொள்ளாச்சி பஸ் நிலையம் அருகில் உள்ள நாச்சிமுத்து பிரசவ விடுதி தேர்வு செய்யப்பட்டு உள்ளது. 

இங்கு தினமும் 300 பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அரசு அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் போலீசாருக்கு தடுப்பூசி போடப்படாது. 

18 முதல் 45 வயது வரை உள்ள பொது மக்களுக்கு மட்டும் முதல் தவணை தடுப்பூசி போடப்படும். இந்த பணி இன்னும் ஒரு சில நாட்களில் விரைவில் தொடங்கப்படும்.

 2-வது தவணை தடுப்பூசி போட வேண்டியவர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் யாரும் நாச்சிமுத்து பிரசவ விடுதிக்கு வர வேண்டாம். 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்